நூறாண்டு கடந்தும் பாவாண்ட பாரதி
இருந்தவரை வறுமையிலே வாடி நின்றான்
ஏழ்மையவன் செந்தமிழை வாட்ட வில்லை
விருந்தமிழ்தாய் நவகவிதை பாடி நின்றான்
விடுதலையை நாட்டிற்காய் நாடி நின்றான்
பெருங்கவியாய்ப் பல்பொருளில் சோதி கொண்டு
பெருநெருப்பைப் பாட்டிற்குள் கூட்டி வைத்து
ஒருகவிஞன் பாரதியாய் எழுந்து வந்தான்
உவப்பினிலே தமிழ்த்தாயும் மகிழ்ந்தா ளன்றோ.
தமிழுக்கு முண்டாசு கட்டி நெஞ்சம்
தலைநிமிரத் தரணியெலாம் தமிழாய்க் கண்டான்
உமிநீங்க அரிசிவரும் உன்ன தம்போல்
உரைசொற்கள் கவிதைகளால் உலகை ஆண்டான்
தமிழாலே பாவாண்ட கவிஞன் இன்று
தலைமுறைகள் பலபேரைப் பாதிக் கின்றான்
அமிழ்தன்ன மொழிபோற்றி ஒருநூ றாண்டு
அற்புதமாய்க் கடந்துமவன் பா,பா ராளும்.
எழுச்சிமிகு கவிபாடி இளையோர் தம்மை
இந்நாட்டு விடுதலையில் கூட்டு வித்தான்
புழுமனத்தில் புரட்சிவிதை போட்டு மக்கள்
போராடக் களமமைத்தான் ஆட்டு வித்தான்
அழுதமுகம் ஆர்ப்பரிக்கும் அக்னிப் பாக்கள்
அனலேந்திச் சுடராக்கி வெளிச்சம் தந்தான்
தொழுதுநிற்போம் பாரதிநின் கவிதை யாளத்
துணைநிற்போம் நூறாணடு கடந்த போதும்.
- இளவல் ஹரிஹரன், மதுரை.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.