தீபாவளியைப் பெருமை செய்வோம்
காசுதனைக் கரியாக்கும் வெடிக ளாலே
கண்டபயன் ஏதுமில்லை என்று ணர்ந்தும்
காசுதனைக் கரியாக்கும் வெடிகள் வாங்கிக்
கண்களுக்கு விருந்தென்றே சொல்லு கின்றோம்
மாசுதனை உருவாக்கிக் காற்றை நஞ்சாய்
மாற்றுவதை நாமெண்ணிப் பார்ப்ப தில்லை
வீசுகின்ற காற்றாலே தூய்மை தன்னை
விலைகொடுத்துக் கெடுத்தேநோய் வாங்கு கின்றோம் !
பண்டிகைகள் எல்லாமே உறவு கூடிப்
பகைமறந்து மகிழ்ச்சியுடன் பழகு தற்கே
நண்பருடன் சுற்றத்தார் ஒன்று சேர்ந்து
நல்லாடை அணிந்துசுவை விருந்த யர்ந்து
கொண்டாடிக் குலவிடலாம்! கோயிற் சென்று
குலதெய்வம் தொழுதிடலாம்! பெரியோர் தம்மை
மண்டியிட்டுக் கால்வணங்கி வாழ்த்து பெற்றே
மனநிறைவில் திளைத்திடலாம் தீப நாளில் !
வெடிகளுக்காய் வீணாக்கும் தொகையில் ஏழை
எளியவர்க்குப் புத்தாடை தைத்த ளித்தும்
பிடிசோற்றுக் கலைகின்ற அனாதை இல்லப்
பிள்ளைகட்கு வயிறாற உணவ ளித்தும்
படிப்பதற்காய் ஏங்குகின்ற தொழில்சி றார்கள்
பள்ளிசெல்லப் பெற்றோர்க்கே உதவி செய்தும்
அடித்தளத்து மக்களிடம் அன்பு செய்தும்
அருந்தீபா வளிநாளைப் பெருமை செய்வோம் !
- பாவலர் கருமலைத்தமிழாழன், ஓசூர்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.