தீபவொளி ஏற்றிடுவோம்
தீபவொளி தீபவொளி ஏற்றிடுவோம்
தீயயெண்ணம் கருகிடவே ஏற்றிடுவோம்
கோபதாபம் மறைந்திடவே ஏற்றிடுவோம்
கோலமிட்டு வீட்டினிலே ஏற்றிடுவோம் !
இல்லத்தில் மகிழ்ச்சிபொங்க ஏற்றிடுவோம்
இனிமையெல்லாம் பூத்திடவே ஏற்றிடுவோம்
பொல்லாத வறுமையோட ஏற்றிடுவோம்
பொலிவுமனை நிறைந்திடவே ஏற்றிடுவோம் !
சாதிமதம் இல்லையென ஏற்றிடுவோம்
சமத்துவத்தில் கைகோர்த்து ஏற்றிடுவோம்
நீதிநேர்மை ஓங்கிடவே ஏற்றிடுவோம்
நியாயங்கள் தலைநிமிர ஏற்றிடுவோம் !
அன்புநெஞ்சில் பொங்கிடவே ஏற்றிடுவோம்
அனைவருமே சுற்றமென ஏற்றிடுவோம்
புன்னகையில் முகம்மலர ஏற்றிடுவோம்
புன்மையெல்லாம் மாய்ந்திடவே ஏற்றிடுவோம் !
புத்தாடை அழகுடனே ஏற்றிடுவோம்
புரிந்துதவி அவர்வாழ்த்த ஏற்றிடுவோம்
மத்தாப்பு வெடிகளுடன் ஏற்றிடுவோம்
மங்கலமே ஒளிர்கவென ஏற்றிடுவோம் !
அதர்மங்கள் தீய்ந்திடவே ஏற்றிடுவோம்
அறநெறிகள் வலம்வரவே ஏற்றிடுவோம்
வதம்புரிந்த சாமுண்டி அருள்புரிய
வணங்கியேத்தித் தீபங்கள் ஏற்றிடுவோம் !
- பாவலர் கருமலைத்தமிழாழன், ஓசூர்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.