இயலாமை
துல்லியமான வாழ்வில்
துயரங்களெல்லாம் ஒன்றுகூடி
துன்பங்களை இழைப்பது – என்
துணிவின்மையை கூட்டுவதற்காகவா?
பகுத்தறிவு படைக்கப்பெற்றும்
பண்பு நலன்கள் பல பொருந்தியும்
படிப்பறிவு கிடைக்கப்பெற்றும் – நான்
பலமுறை வீழ்வதன் காரணம் என்னவோ?
சிறுசிறு தோல்விகளிலும்
சீறியெழும் துக்கத்தை – மிகச்
சிறப்பாகக் கையாள – இந்த
சிறுப்பிள்ளைக்கு கற்றருள்வீரா?
புலனைந்தும் சளைக்காது
புயல்வேகத்தில் பணியாற்றினாலும்
புலம்பும் இந்த அறிவிலி மனதிற்கு
பொன்மொழிதான் யார் மொழிவாரோ?
வெகு நேரம் சிந்தித்ததற்கு
வெகுமதியாய் கிடைத்ததே
வெறுமனே குமுறும் மனதிற்கு
விலையில்லா விடையாய்!
இயன்றவரை முயல்பவனுக்கும் – எதையும்
இன்முகத்துடன் ஏற்பவனுக்கும்
இயலாமையென்று ஒன்றுமில்லையே
இயலாமையென்ற ஒன்று என்றுமில்லையே!
- ஹ்ரிஷிகேஷ், ஈரோடு.
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.