நீங்க என்ன ஆளுங்க...?

பச்சை பசேல் புல்வெளி
சிவந்த கண்கள்
பெரிய நீளமான அழகான காது
எதையோக் கொரித்துக் கொண்டிருந்தது
அந்த மொசு ,மொசு பிராணியின்
பெயரென்ன?
முயல் என்றனர்.
என்னைப் பார் யோகம் வரும்
ஏதோ ஒரு மளிகை கடைப்
புகைப்படத்தில் பார்த்ததாய் ஞாபகம் ?
துணி துவைக்கும் தொழிலாளர்கள்
பொதி சுமக்க
அழைத்துச் செல்லவதுண்டு
சாம்பல் நிறமுடைய
அந்த விலங்கின் பெயரென்ன?
கழுதை என்றனர்.
வேகமாய்ச் சீறிக் கொண்டு ஓடும்
கடிவாளம் இதற்கு உண்டு
சதுரங்க விளையாட்டிலும் கண்டதுண்டு
பழைய ராஜாக்கள் பெருமையாய்
வளர்த்ததாய் வரலாறுண்டு
யானைக்கும் அடி சறுக்கும்
இவனுக்குச் சறுக்கினால் கூட
துள்ளிக் குதித்து ஓடிடுவான்
கம்பீரமாய் இருக்கும்
கால்களுக்கு காலணி அணிந்த
அவன் பெயர் என்ன ?
குதிரை என்றனர்.
முதுகில் கூனோடு சுமந்த
பாலைவனக் கப்பல்
அந்த ஷேக் நாட்டில்
அதிகமாய்க் காணப்படும்
அந்த விலகின் பெயரென்ன ?
ஒட்டகம் என்றனர்.
கா, கா எனக் கரைந்தால்,
இவன் கரைவது
விருந்தாளி வருவதற்கு அடையாளமாம்
திதி, படையல் கூட
இவன் உண்டே பிறகே
நமக்குக் கிடைக்கும்
ஒற்றுமையின் மறுபெயர்
கரெண்ட் கம்பிகளில்
சில நேரம் மரண ஊஞ்சலாய்
இவன் வாழ்க்கை?
நம் மூத்தோர்களின் முன்னோடியான
இவன் பெயரை
காக்கை என்றனர்.
உண்ட சோத்துக்கு அது
ரெண்டகம் பார்க்காது
ஜாக்கிரதை என்று போர்டு வைத்தாலும்
நம்மிடமிருந்து தான்
அவனைப் பாதுக்காக்க வேண்டும்
வாலாட்டியபடி வரும் அது
நன்றியின் மறுஉருவம்
அவன் பெயரை நாய் என்றனர்.
இரண்டு கால், இரண்டு கை
கண், காது, மூக்கு இன்னும்
சில உறுப்புகள் இருந்தது
வித விதமாய் உடையணிந்து இருந்தார்கள்
கலர் பூச்சு பூசியிருந்தார்கள்
சிலர் கருப்பாகவும், வெள்ளையாகவும் இருந்தனர்
பட்டை போட்டவனை இந்து என்றனர்
சிலுவை போட்டவனை கிருத்துவன் என்றனர்
குல்லா போட்டவனை முஸ்லீம் என்றனர்
ஏனோ எவனும்
அவர்களை மனிதனாகவேச் சொல்லவில்லை.
சாதி, மதம் எதுவும் வேண்டாம் என்று
ஒதுங்கியக் கூட்டத்தைப் பார்த்து
மனிதம் செத்த கடைசி உலகத்தில் இருந்து
கடைசியாய் ஒருவன் கேட்டான்
நீங்க என்ன ஆளுங்க... என்று?
- நௌஷாத்கான். லி, சோழபுரம், கும்பகோணம்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.