விதைச் சங்கிலி
இனிது தமிழே
இயம்பிடுவேன் என்றும்
மனித மொழிகளில் வாழும் - தனித்த
சிறப்பொடு செம்மொழியாய்ச்
சீர் பெற்று நின்று
திறங்காட்டும் தன்மை தெரிந்து.
தெரிந்ததொரு பேச்சில்
திசையெலாம் நன்கு
விரிந்ததொரு மொழியொன்றே வெல்லும் - புரியும்
இலக்கியங்கள் மிக்க
இசைஞானங் கொண்ட
நிலைத்த தமிழ் நின்றிடும் நேர்.
நேர்மறை காலமெல்லாம்
நெஞ்சம் உவந்திடும்
பார்நிறை செம்மை படைத்திடும் - தீர்ந்திடாச்
செந்தமிழ் போற்றிச்
சிறுமதியார் பொய்யுரைகள்
வெந்தணலில் ஏற்றியே
வீழ்த்து.
வீழ்ச்சி தமிழ்க் கில்லை
வெற்றி அதனெல்லை
வாழ்ச்சி வரவாக்கி
வாழுமே - தாழ்ச்சி
ஒருபோதும் தாரா
தொருபோதும் வீழாது
வருபோதும் நின்றுதரும்
வாழ்வு.
வாழ்வு நமக்குண்டு
வண்டமிழ்ச் சீருண்டு
காழ்ப்பு மனமில்லை காண்பீர் நீர் - மூழ்கும்
கடல் கொண்ட முத்தமிழ்
காலமதை வெல்லும்
உடல்கொள் உயிரே
உணர்.
- இளவல் ஹரிஹரன், மதுரை.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.