ஆசை அழிந்திடவே
மற்றென்ன சொல்வேன் மறந்தும் நினையாதச்
சுற்றம்போல் பாராது சொல்வதென்ன - கற்றவரே
காதற் களத்தினில் கண்துஞ்சும் கொற்றவனை
வாதஞ்செய் தற்கென் வழி.
முற்றும் துறந்தோரும் முன்னே சிறந்தோரும்
பெற்ற பயன்தான் பெரிதாமோ - கற்றவரே
சற்றுங் கருதாமற் சாகும் கலையறியா
துற்ற நலமென்ன சொல்.
விற்றுக் கிடைக்காத வீணுக் கழியாத
கற்றுக் கொடுக்காத காரியமென் - கற்றவரே
முற்றும் மனங்கொண்டு மூட மதியறுத்த
சொற்றுணை வேதியனைச் சொல்.
பற்று மிகுந்துவரும் பாசம் மிதந்துவரும்
உற்ற துணையாக உள்வளரும் - கற்றவரே
நற்றவம் செய்திட நாயகன் நம்முன்னே
பொற்பதங் காட்டப் புரி.
கற்பனைக் கெட்டாது கண்முன்னே தோன்றாது
முற்றிலும் நான்கெடவே முன்தோன்றும் - கற்றவரே
அற்ப மெனத்தோன்றும் ஆசை அழிந்திடவே
உற்றவுருக் காட்டும் உனக்கு.
- இளவல் ஹரிஹரன், மதுரை.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.