அலையும் நானும்
பரவளையம் கண்டேன்
வட்டங்கள் கண்டேன்
கற்களும் மணலாய்
மணலும் கற்களாய்
கைகளில் நிரப்பிக்
குவிய வைத்துக் கோபுரங்கள்
அமைத்தேன்..!
விரல்களால் மணலள்ளி
எண்ணிக்கை மேற்கொண்டு
சூத்திரங்கள் மனதிலோட
கணித மேதையாகிப் போனேன்….!
அரை நிலாக்களை மணலிலும்
கடலின் அரைப்பைகளிலும்
மறையும் தருணத்தில்
கண்டு கண்டு ஈரமணலில்
கனவு கோட்டைகளைக் கட்டி சாய்த்தேன்…
முழுதும் மறைந்த நிலவின்
தலை தட்டி கட்டிடங்களின்
அடித்தளத்தில் சாய்ந்தேன்…!
அந்த நண்டுகளுடன்
அலை தொடுதலை சிலாகித்து
பேராவலாய்
பேரண்டத்தின் ஒரு புள்ளியாய்
காலைத் தாண்டி
மூளையைத் தீண்டி
வேறொரு பிரபஞ்சம் அழைத்துச் செல்கிறது
ஓயாத நிலையில் அலையும்
அதன் உரக்க சத்த அறிவுரையில்
கரம்பிடித்து நானும்…
- கவிஞர் கார்கவி, நாகப்பட்டினம்.
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.