காதலி... காதலி... காதலி...
காலைப் பொழுதைக் காதலி,
இரவின் ஆடையைக்
கதிரவன் களைய
குணதிசையில்,
வானமகள் வதனம்
நாணிச் சிவக்க
திரைக் கரங்கொண்டு
கடலன்னை
நீலச்சேலை கொசுவியுடுத்தும்
எழில் வண்ணங்காண்பாய்.
இயற்கை காதலி,
புன்னுனிதாங்கும்
ஒற்றைப் பனித்துளியில்
முற்றுலகையும் காண்பாய்.
மலர்களைக் காதலி,
மொட்டலரும்
மலர்களின் பரிபாசை
கேட்டு
பறந்தோடி வந்த வண்டினம்,
மலருக்குள் மதுவாடிக்
களித்துமுரலும்
ஜலதரங்கம் காண்பாய்.
அன்னையைக் காதலி,
அவள் பாதவிணையில்
பாவமீட்சியின் பரிசாம்
சுவர்க்கம் காண்பாய்.
தந்தையைக் காதலி,
அவர்,
தோள் வழியே
இமயத்தைக் காண்பாய்.
உடன் பிறப்புக்களைக் காதலி,
உள்ளங்கைக்குள்
உலகமடங்கக் காண்பாய்.
உத்தியோகம் காதலி,
உயர்வும் உலகும்
உனக்கே உரித்தாகக் காண்பாய்.
மனிதம் காதலி,
மதமொழிந்த
மனிதர் மாண்பு காண்பாய்.
கவிதை காதலி,
கனக்கும் இதயம்
காற்றில் மிதக்கக் காண்பாய்.
- ஏ. எம். முலவ்பர், குறிஞ்சாக்கேணி- 02, கிண்ணியா, இலங்கை.
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.