மிச்சம்

மனித வாழ்வின் மிச்சங்களை
நினைத்துப் பார்க்கிறேன்
எல்லோர்க்கும் பகிர
என்னென்னவோ மிச்சமிருக்கலாம்
உங்களோடு பகிர
எனக்கொன்று மிச்சமிருக்கிறது
நீங்கள் 70, 80, 90 -களின் பிரதிநிதியா?
என்சொல் மிச்சம் உங்களுக்குப் புரியும்
என்றாவது நீங்கள் மிச்சமாய்
வீணான உணவொன்றை சந்தித்திருக்கிறீர்களா?
உங்களின் பால்ய காலத்தில்,
உடைபட்டுச் சிந்திய தேன்மிட்டாய்த்
துளிகளாய் இருக்கலாம்…
பாதிச் சோளக்கதிரில் பால்யகால
நட்பு வளர்க்க, ஒவ்வொரு சோளமாய்
உதிர்த்தாய் இருக்கலாம்…
திருவிழாக்களில் மட்டுமே
கண்டடைந்த இட்லி தோசைகள்,
மறுநாளும் மூன்றுவேளை உணவாய்
மாறியதாய் இருக்கலாம்…
மஞ்சணத்தி மரங்களிளேறி
காலுடைந்து மண்ணில் சிதறிய
கனிகளை பங்கிட்டு
உண்டதாய் இருக்கலாம்…
கம்பங்கதிர் பால்பிடிக்க
நம் சுவாசக்குழலில்
வாசனை பிடித்து
களங்கண்ட நாளில்
கசக்கிக் கண்ணெரிய
வாயிலிட்டதாய் இருக்கலாம்…
அவசரத்துக்கு கிடைத்த
அவரையோ மொச்சையோ
வெங்காயமோ தீயிட்டு
நாக்கு வெந்ததாய் இருக்கலாம்…
இன்றோ பார்க்குமிடமெங்கும்
வீணான உணவுக்குவியலே கிடக்கிறது,
காணும் மனம் பால்யத்தை நினைத்து
கண்ணீர் வடிக்கிறது…
வயிறு பசியில் துடித்துக் கொண்டிருக்க
நடந்தே செல்லும் வேளையில்
யாரோ தவறவிட்ட அந்த மிட்டாய்
பொக்கிசமாய் கிடைத்ததும்,
யாரும் பார்க்குமுன்னே
தூசிதட்டி வாயிலிட்டதும்,
மதியச் சத்துணவின் வாசம் வருகையில்;
படிப்பு மறந்து பசி வந்ததும்,
ஒரேயொரு ஆரஞ்சு மிட்டாய் வாங்கி
சட்டையில் திணித்து நாலாய் கடித்து
வாயூறச் சப்புக் கொட்டியதும்,
நினைவில் ததும்புகிறது…
இவ்வுலகம் இருவகையால்
நிரம்பியதென நினைக்கிறேன்
உணவைச் சுவைக்காய்
உண்ணும் ஓர் கூட்டம்
உடலில் உயிரை
ஒட்ட வைக்க உணவைத் தேடும்
இன்னுமோர் கூட்டம்…
விளம்பரம் காணும் உணவுகளை
மேசையில் கிடத்தும் ஓர் கூட்டம்
வீசியெறியப்பட்ட உணவுகளைக் கண்டும்
ஏக்கத்தில் உமிறு விழுங்கும்
மற்றொரு கூட்டம்…
மிச்சமென்று தூக்கியெறியும்
நம் உணவுகள்
உணவின்றி தவிக்கும்
நால்வருக்குப் போதுமானதென
அறிவீர்களா...?
நம் மிச்ச சொச்சங்களாய்
இருக்க வேண்டியது
நல்ல நினைவுகள்தான்
உணவுகளல்ல…
- முனைவர் பி. வித்யா, மதுரை.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.