என் நட்பே!

கானல் நீரைத் தேடி
காத தூரம் ஓடாதே!
இது கானல் தான்
ஆழ் மனதிடம் சொல்!
என்னைத் தேடும்
உன் உள்ளத்திடம் சொல்!
நான் உனக்கானவள்
அல்ல என்று!
உன்னில் தோன்றியதை
நீ அவிழ்த்தாய்!
என்னுள் இருந்ததை
நான் உரைத்தேன்!
நம் கருத்து வேறானால்
நிறுத்திடுவோம்!
நம் அழகான
நட்பின் பயணத்தை!
உன் கை கோர்க்க
நினைத்ததில்லை என்றுமே!
என் மனதைப் புரிந்து
தோள் கொடுப்பாய்
என்ற எண்ணமே என்
மனதின் அடி வரையில்!
இதுவும் நமக்கு
ஒரு புரிதல் தான்!
தவறாக நினைக்கவில்லை
நீ கூறியதை!
எனக்கானப் பாதையில்
பயணிக்க விரும்புகிறேன்.
மகிழ்வேன்
நீ உடன் வந்தால்!
புரிந்து கொள்வேன்
நீ விலகிச் சென்றால்!
நட்பே!
தேடல் என்பது
துவங்கிவிட்டால்
கிடையாது முடிவென்பது
எனக்கென
இலட்சியங்கள் உண்டு
வெகுதூரம் பயணிக்க!
பாதைகள் உண்டு
நீ என்னை
முழுவதுமாய் உணர்ந்தவன்
என்றேக் கர்வப்பட்டேன்
என்னுள்...!
இந்தக் கள்ளத்தனம்
உன்னுள்
விதைத்த என்னையே
நோகிறேன்!
நான் பல இடங்களில்
புரிந்து கொண்டதுண்டு!
உன் உண்மையான
நட்பின் ஆழத்தை!
உன் தவிப்பையும் துடிப்பையும்
நான் உணர்ந்தேன்!
நீ உரைத்த நேரத்தில் என்
கண்களைப் பார்க்காத போது!
நீ என்னுள்
பயணம் செய்தாய்!
தாயாய், தந்தையாய் ஏன்
நல்ல சகோதரனாய்!
நெகிழ்ந்துள்ளேன் பலமுறை
மன மகிழ்ச்சியோடு!
நட்பே! நீ வேண்டும்
என் வாழ்நாள் முழுதும்!
நான் இடரும் போது
தாங்கிப் பிடித்துள்ளாய்
பல முறை!
உன்னைத் தாங்க மாட்டேனோ
இவ்வொருமுறை!
கையேந்துகிறேன்
கணக்கும் இதயத்துடன்
தொடர்வாயா நம் நட்பை!
கோபமில்லை
உன் மீது எப்பொழுதும்!
நோகிறேன்! என்னையே
முப்பொழுதும்
உணர்ந்திருக்கிறேன்!
உன் அன்பான
நெஞ்சத்தை
ஒன்றிற்குப் பல முறை!
கண்களை மூடினால்
ஏனோ பேரிழப்பு நெஞ்சினில்!
இருளினுள் மூழ்கிய பயம்
என்னுள் பிரவேசம்!
உடைந்த இடம் எதுவென்று
தெரியவில்லை!
முழுவதுமாய் உடைந்தேன்
என்பது மட்டும் உண்மையே!
துளியளவும் விருப்பமில்லை
உன் நட்பை இழக்க...!
எங்கேத் தேடுவேன்
உன் போல் ஒரு தாய்மை
நிறைந்தவனை!
இவ்வரம் மீண்டும்
கிடைக்காது
நான் அறிவேன்!
காதல் என்னும் இச்சைக்கு
கை கோர்த்தால்
கொச்சையாகும்
நம் நட்பின் புனிதத்துவம்!
வாழ்கிறது உன் ஒற்றை
வார்த்தைகளில்!
நம் நட்பு தொடர்வதும்,
வீழ்வதும்!
பரிசீலனை செய்!
வாழ்நாள் முழுவதும்
என் ஆத்ம நண்பனாக
பயணிக்க...!
வரம் கொடுப்பாயா!
நம் நட்பு
இறவாமல்
உயிர் பெற...!
- செ. நாகேஸ்வரி, கெடார்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.