மருதாணி நினைவுகள்

ஆம்பள புள்ள
மருதாணி வைக்குறியே...
உனக்கு வெட்கமா இல்லையா என்ற
நண்பர்களின்
ஏச்சு, பேச்சுகளையெல்லாம்
ஒரு புன்னகையோடு
கடந்து சென்றேன்.
என்னம்மா மருதாணி வைக்குறே ?
கையில சாணி தட்டிக்கிட்டு
ஒரு வட்டம் - அதைச் சுத்தி
நாலு அஞ்சு புள்ளி
ஏதாவது டிசைன்ல
மருதாணி போட்டு விடும்மா...
இல்லைன்னா
ஏதாவது ஸ்டிக்கர் வச்சு
மருதாணி இடும்மா... என்றேன்
டேய் அதெல்லாம்
எனக்குத் தெரியாது
எனக்குத் தெரிஞ்சது
இதுதான் என்றாள் அம்மா
சின்ன வயசா இருக்கும் போது
ஹாஜி அண்ணன்
கல்யாணத்தின் போது
நிலவர் மச்சி
துடைப்பக் குச்சி வச்சு இட்ட
டிசைன் மருதாணி
எவ்ளோ அழகா இருந்தது தெரியுமா
என்றேன்
இப்ப உனக்கு
எரும வயசு ஆகுதடா
இப்பயெல்லாம்
உன் மச்சி
உனக்கு மருதாணி இட மாட்டாடா
ஏன்னா
அவ புருஷன்
உன்னையும் உதைப்பான்
அவளையும் உதைப்பான் என
செல்லமாகத் திட்டி விட்டுச் சென்றாள் அம்மா
வட்ட வடிவிலான
வறட்டி போன்ற
வெள்ளேந்தியான
அம்மாயிட்ட மருதாணியும்
அப்போது
அன்போடு
கிண்டல் செய்து கொண்டே
மச்சியிட்ட மருதாணியும்
புளியின் குணத்தை தாண்டியும்
கருங் சிவப்புடன்
சிவந்திருந்தது
காலங்கள் கடந்தன
ஒரு பெருநாள் வரும்
நாட்களுக்கு முந்நாள்
சின்ன வயசு ஞாபகத்தில்
மனைவியிடம்
எனக்கு மருதாணி வச்சு விடுறியா என்றேன்
ஒரு கேவலமான பார்வையுடன்
வேண்டா வெறுப்பாய்
கடையில் வாங்கிய
மெஹந்தி கோனை கொண்டு
டிசைன் டிசைனாய்
கரங்களில் இட்டாள்
மனைவி பூசிய
மெஹந்தி
நன்றாய் சிவக்க வேண்டும் என்பதால்
கோடாலி பிராண்ட் தைலம் அதன் மேலிட்டு
உறங்கச் சென்றேன் .
மறுநாள் காலை
சூரியன் செக்கச் சிவப்பாய் உதித்தது
ஏனோ
பாக்கெட் மெஹந்தி மட்டும்
கரங்களில் சிவக்கவே இல்லை...
- நௌஷாத்கான். லி, சோழபுரம், கும்பகோணம்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.