அழகோடு கை கோர்த்திடுவோம்!
பெயரனே என் உலகம் எனக் கூறிடும்
தாத்தாவின் நடை அழகு
என்னே! என் பெயர்த்தியின் அழகு
என்றே உரைத்திடும்
பாட்டியின் மிளிர்வு அழகு
அவை தனிலே என்னை உயர்த்துவான்
என்றே எண்ணிடும் தந்தையின் நனவு அழகு
எனையும் அன்னையாய் உயர்த்திட்டாய் என்றே
கனிந்திடும் அன்னையின் அன்பு அழகு
தமையனவன் கைப்பிடித்து நடையிடும்
தங்கையின் பாசம் அழகு
எனை உனக்குள் கொண்டாய்
என்றே மொழிந்திடும்
தலைவனின் காதல் அழகு
நாணலாய் வெட்கம் கொள்ளும்
தலைவியின் நாணம் அழகு
உறவுகள் தருபவை கசப்பெனினும்
இரசித்திட எண்ணுதல் ஓர் அழகு
கற்றோர் அவையில் கசடற மொழியும்
ஆசானின் உரை அழகு
உலகோர் முன்னே பெருமையாய் வீற்றிடச் செய்த
மாணவனின் மதி அழகு
மனிதமின்றி இயற்கையை அழித்திடினும்
மீண்டு(ம்) உறவாடும் இயற்கை அழகு
இடர் பல தொடர்ந்தாலும் என்னைக்
கண்ணாரக் கண்டாலேப் போதுமென்றே
அழைத்திடும் இறைவனின் விழியழகு
வண்ண வண்ண எண்ணங்களாய்
விரிந்திடும் வாழ்க்கை அழகு
தடைகள் பல வந்தாலும்
நேர்மறை என்ணமதனை உரமிட்டு
நாளைய வானில் பகலவனாய்
ஒளிர்ந்திடக் கலந்திடுவோம்
அழகோடு கை கோர்த்து
நடையிடுவோம் வாரீர்!
- த. செல்வராணி அன்பழகன்
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.