காத்திருப்புப் பட்டியல்
நன்றாகப் படித்தவனும்
நாலு டிகிரி முடித்தவளும்
கொட்டிய முடி கொண்டவனும்
கூந்தலுக்குத் தினம்
ஒரு மணி நேரம் ஒதுக்குபவளும்
கூட்டாஞ்சோறு உண்டவளும்
உச்சிவெயில் குடும்பத்தை
வியர்வையாய்ச் சிந்தியவனும்
விலை போகாத காய்கறிகள் போல
நெடுங்காலமாக
உறங்கிக் கொண்டிருக்கின்றனர்
வண்ண உடையில்
அடித்த பவுடர்,
சீவிய தலைமுடியின் வகுடு மாறாமல்
அழிந்து கொண்டே வரும்
புகைப்படங்களின் வரிசையில்
வெற்றிலை குதப்பிய வாயில்
அந்த நூறு பொய்களை
முனுமுனுக்கும் தரகர்களின்
அக்குல் அணைப்பு
பைக்குள்ளே
மூச்சுத் திணறிக் கொண்டிருக்கும்
அந்தக் காத்திருப்புப் பட்டியல்
வெள்ளந்திகள்...!
- கவிஞர் கார்கவி, நாகப்பட்டினம்.
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.