வாழ்நாள் முழுதும்

உன்னைப் பார்த்த
முதல் தருணம்
என்னுள்
பரவசப் பிரவாகம்!
என்னைக்
கடந்து செல்லும்
தருணம்
இனம்புரியா பதட்டம்
நெஞ்சினில் கொடியேற்றும்!
இதயமோ... துடிக்கும்
இடியாய் முழங்கி என்னை
உன்னிடம் இனம் காட்ட!
நீ இருக்கும் இடமேத்
தீவாய் எண்ணி
உன்னைச் சுற்றியே
பாடாய்ப்படுத்தி
சஞ்சரிக்கும்
என் நினைவுகள்!
உன்னைப் பார்க்காத
தருணமே அமைதியாய்
வாழ்கிறேன்!
உன்
நினைவுகளுடன்
மோன நிலையில்
பயமின்றி
மகிழ்வு நிரம்ப!
விழுந்தேன்! உன்னுள்
எழ முடியாத
அன்பு மேலோங்க!
தவிர்க்க முடியவில்லை
வன்முறை செய்யும்
உனது கண்களை!
பல இரவுகள்
விழித்திருக்கிறேன்
உன் நினைவுகளை
நெஞ்சினில் சுமந்து
மனம் முழுதும் ஏனோ
நீயே நிறைந்தாய்
வேறு நினைவின்றி
தானாய் சிரிக்கவும்
தற்குரியாய் நடக்கவும்
உன்னோடு வாழ்வதும்
போன்ற பிரம்மை
எனக்குள்!
உன் நினைவில்
நீங்கி போனால் என்
உயிரே இல்லை
என உணர வைத்தாய்!
மூச்சுக்காற்றும்
உன் பெயரைச் சொல்லி
வாழ்கிறது
என் வார்த்தை
கேளாமல்!
உனக்குச் சேவகம்
செய்வதை
என் புலன்கள்
பயனாக எண்ணிக்
கிடக்கின்றவே
என் சொல் கேளாமல்!
தாய்மை
பத்து மாதமே
உன்னைச் சுமந்து
திரியும் மனம்
முக்தி அடைவது
எக்காலமோ
கூறாயோ அன்பனே!
ஏன் ஆட்டி வைக்கிறாய்
உன் கைப்பாவையாய்
என்னுள் கலந்து
அன்பே!
விட்டுவிடத் துடிக்கும்
என் மனம்
ஏனோ விடாமல்
துரத்துகிறது
உன் காதல் நினைவு!
பலமுறை முயன்றுள்ளேன்
தோற்றுப் போனதோ
என் மனம் மட்டுமே!
வசியம் செய்தே
அழைத்து வந்தாய்!
வாழ்நாள் முழுதும்
என்னைப்
பரிதவிக்க செய்யவோ!
- செ. நாகேஸ்வரி, கெடார்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.