மௌனப்பூச்சி
மெல்ல மெல்லத்
தொடர்கிறது
இந்த மௌனப்பூச்சி..!
மூளையில் ஆரம்பித்து
பருவத்தில் குடில் கட்டுகிறது
இந்த மௌனப்பூச்சி..!
தேகத்தில் சூடு வேண்டும்
தேடி தேடி விரல்களில்
வேகம் வேண்டும்
அறிவு மழுங்கி ஆசையாகி போனது...!
ஆறங்குல பெட்டி அனைப்பில்
மடக்கி விரித்த
மடிக்கணினி மையத்தில்
வெள்ளொளியாய் படர்கிறது
பருவச் சிறு சிறு மௌனப்பூச்சி...!
நான்கறை படர்ந்து
நகம் கடித்து வியந்து
இருள் நீள எதிர்பார்த்து
அடுத்தடுத்து தேடி
அபாயம் அறியாது பயணிக்கும்
காதலுக்கும் காமத்திற்கும்
இடையான மௌனப்பூச்சி...!
எத்தனை கால்களிருக்கும்
கூண்டினை எப்படி அமர்த்தும்
இரைகளை எந்த வலையில் தேடும்
இயற்கையில் எத்தனை பூச்சிகளை அழிக்கும்
இந்த தென்படாத மன மௌனப்பூச்சி...!
அவள் யாராகிப் போனாலும்
வித்தியாசத்தைப் பலப்படுத்தும்
காமக் கதவுகளின் கொடும்
கருவிழிகளை ஏந்திடும்
வயது பாரா மௌனப்பூச்சி...!
இருளைப் பற்றி
இதயமும் மூளையும்
நடுங்கும் வயதினை
தின்று குவித்திடும்
கொடியதோர் மௌனப்பூச்சி...!
- கவிஞர் கார்கவி, நாகப்பட்டினம்.
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.