தூரத்து நேசம்
ரணங்களுக்குப் பொட்டு வைத்து
பூ முடித்து அழகு பார்க்கும் நேரத்தில்
மழைநீர் அழித்துவிட்டது
அந்தக் குங்குமத்தை ...!
மிச்சத்தை விரலெனும் ஆசை
துடைத்துவிட்டு நகர்கிறது
மழையெனும் பிழை காலத்தில்...!
வெளிவரத் துடிக்கும் இதயத்திற்கு
விரல்கள் நடுங்குகின்றன வாசல் வர
எங்கேனும் சம்பிரதாய ஒற்றைக் காலணி
மனிதர்களின் கால்தடம்
அரவம் பெறும் என்று...!
இரு மாரும் நிரம்ப பாலூட்டிய
அம்மையவள் கரத்தில்
குழுங்காத வளையல் ஒலியின்
சிறு வாசனையை
கன்னத்தில் பதித்துப் பதித்து
கேள்விக் கனைகளை
மனதில் கேட்கிறது
இயலும் பச்சிளங்கள்..!
தூரமான துணையின் நினைவை
அனைவரும் காணும் நிலையில்
சுவரிலும் தனிமையில்
அலைபேசியின் ஆள்காட்டி விரலில் வழியே
அந்தத் தூரத்து நிலவை வருடி
சொட்டுச் சொட்டுகளாக
வழிந்தோடும் கண்ணீரில்
வெள்ளோட்டமிடும் அமாவாசையான
ஓர் பௌர்ணமியின்
தூரத்து நேசம்....!
வெண்மையில் நிற்கும் நிலவிற்கு
விலகிடும் மேகங்களில்
சாரலிடும்
நினைவின் தூரத்து நேசம்...!
- கவிஞர் கார்கவி, நாகப்பட்டினம்.
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.