வாட்சப் வழியே...
முன்பெல்லாம்
மாதம் ஒருமுறை
'டேடா'விற்குப் பணம் செலுத்துபவன்
இப்பொது மூன்று மாதச் சந்தாவிற்குப்
பழகி விட்டேன்...
ஏதோ ஒரு குழுவில்
நீ உரையாடிச் சென்ற
பொழுதெல்லாம்
சேகரிக்கப்படாத
உனது எண்ணை
'கிளிக்' செய்து
டிபியை மட்டும்
பலகாலம் பார்த்து
வெளியேறுகிறேன்...
இப்பொது கிடைத்த
தைரியத்தில்
'ஹாய்' எனக் கூறிவிட்டேன்
உன் முகம் காணாமல்
சிறு அங்குலப் பெட்டிக்குள்
ஒற்றைச் சாம்பல்
டிக்குகள்
நெஞ்சை சற்று அமைதிக்குள்ளாக்கியது
நீ 'ஆன்லைன்' இல்லாத
வெறுமையைத் தந்தது...
இரட்டைச் சாம்பல் டிக்குகள்
நீ வந்து சென்ற
சுவடுகளை டிக் செய்து சென்றது
இரட்டை நீல டிக்குகள்
வியர்வை வழிந்தோட
என்ன ரிப்ளை என
நடுக்கலில் உறைய வைத்தது
என் பெட்டியில்
நீண்ட நேர
பச்சை நிற
டைப்பிங் சொற்களுடன்
தொடர்புள்ளிகளின் முடிவில்
கிடைத்தது...
"ஊ இஸ் திஸ்"
அகலப்பரந்த ஆழியில்
இரு சொட்டு
நீர்த்திவலையாய்
என்னுள் தடம்பதித்தது
இரட்டை நீல டிக்குகள்...
- கவிஞர் கார்கவி, நாகப்பட்டினம்.
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.