வலி மறக்கிறது...!
கட்டுக் கரும்பையும்
மணி நேரத்தில் கடித்து
ருசி பார்த்த அப்பா
இப்போது
கதவினோரம் அமர்ந்து
கடைவாய்ப் பல் ஆடுகிறது
கடினமான உணவு வேண்டாம்
என்கிறார்...
பல கவுலி வெற்றிலைகளை
மென்று தின்ன
அன்னையின் பற்களில்
தினம் ஒரு வலி
எட்டிப் பார்ப்பதால்
ஒரு கவுலி
ஒரு மாதமாகப்
பிரித்து வைத்திருக்கிறாள்...
கடிக்க முடியாத
கரும்பினைப் பேரனும்,
வாய் குதப்பிய வெற்றிலையில்
பேத்தியும் மடியில் அமர...
சுவை நிரம்பி வலி மறக்கிறது
முதுமையின் பாசத்தில்...
- கவிஞர் கார்கவி, நாகப்பட்டினம்.
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.