இறகாகக் காத்திருக்கிறேன்...!
ஓங்கிய தென்னையில்
நொங்கு தெரிவது போன்ற
மாலைக்கண் முட்டாள் மனிதர்கள் முன்
எனது சுயம் காத்துக் கொள்ள
புன்னகையை உதிர்த்து உதிர்த்து
மீண்டும் வளரும் இறகாகக் காத்திருக்கிறேன்...
பைத்தியக்காரனான எனது பேச்சின்
இறுதியில் வைத்த ஒரு இக்கிற்காக
எனைக் கடந்து செல்பவரின்
சிறு முகச்சுழிப்பி்ல் சொட்டு சொட்டாக
கொட்டும் கழுகு மனிதரின்
வளராத இறகுகளை சிலாகித்து சிலுப்பலில்
எனது இமைகளை விரித்து
இறகாகக் காத்திருக்கிறேன்...
கற்றதெல்லாம் கொட்டிய புத்தகத்தின்
கடைசி பக்கத்தில் தீர்ந்த
மை இறகுப் பேனையில்
குருதி ஊற்றி புனைந்திட
சிறு உதறலில் கசிந்திடும்
சுவரோர மையில் இறகாகி
நான் பறக்கக் காத்திருக்கிறேன்...
பரந்த ஏரியில்
ஒரு மீனாகவும் நான்
அந்த இலையாகவும் நான்
நகர்த்தும் அலையாகவும் நான்
திமிரிடும் கெண்டையின்
நுனி செதிலில் கொஞ்சமும்
சிக்கிடாத குருவியும் நான்தான்
கழுகின் இறகும் நான்தான்...
அந்த ஓரமாக மண்புழுவை மட்டும்
இரைத்துக் கொண்டு அமர்ந்திருக்கும்
பொட்டல் வெயில்
மீனவனும் நான்தான்...
மையல் கொண்ட
இந்த மையக்காட்டு வாழ்வில்
ஒரு பென்சிலின் நிரம்பிய
மையாக கோணமானியின்
இருக்கலில் சிக்கிய காப்பர்
இறகின பறவையாய்
கருமையின் வழமையை
உரைத்து உரைத்து சிறகடித்து
சோர்வுகளைப் படம் வரையும்
கருமை இறகாக நான் காத்திருக்கிறேன்...
பறந்து விடவா மனதோர
புதுவானம் தனில்.....
- கவிஞர் கார்கவி, நாகப்பட்டினம்.
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.