பசிக்கான தூண்டில்
நான் விரித்த வலைக்கெல்லாம்
சிக்கிக் கொள்ளாத கவலை மீன்
பசியாக மாறி
எனது மண்புழு ஆசையில்
மாட்டிக் கொண்டது
பசி மட்டும்தான் மிச்சம் உள்ளது...
கல் எறிந்த கலக்கத்தில்
மீன் பிடித்தல் சரியல்ல
கல்லை அடுக்கு மதகு தேடும்
சிறு நம்பிக்கை போல...
ஓடும் நதிக்கரையில்
நான் வீசிகின்றேன் வலை
எடுத்து எடுத்துத் தூண்டில் வீசி
பசியை மறக்கடிக்கிறான்
அந்த மூங்கில் தூண்டில்காரன்...
யாராலும் பிடிக்க இயலாத
சேற்றில் பிதைந்த
ஆசைக் கெண்டைய
கிளரிவிட்டு பிடித்தல் சுகமாகிறது
இந்த தேடலின் இறுதியில்
கிடைத்த பசிக்கான தூண்டில்...
பத்து பெயர் இருக்கும்
இடத்தில் மொத்தக் குளமும்
சத்தத்தில் அலையாடுகிறது
இனி மீன் கிடைத்தால் என்ன
பசிச்சுறா சிக்கினால் என்ன...
ஒரு மண்புழுவிற்குக்
குளமே வாய்திறக்கிறது,
பசியென்றதும்
மொத்தமாகப் போர்த்திக்
கொள்கிறது கண்களை...
எத்தனை வரமாயினும்
மொத்தமாக வீசப்படுகிறது
பசிக்கான தூண்டில்கள்
முள்ளில் சிக்கியது
பருக்கைகள் மட்டுமே...
- கவிஞர் கார்கவி, நாகப்பட்டினம்.
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.