யாசகம்
நன்றாக என்னைப்பார்
எனது ஆடைகளைக் களைந்து
நீ அறியப்படுவது என்னவென்றால்
என்றோர்நாள் நீ பெறும் என் நிலையே....!
*****
அப்பாவின் கரம் பிடித்த
குழந்தையின் கண்களுக்கு
சேர்க்கப்படாத பெயராய்
தாத்தாவென அழைக்கப்படுகிறார்
அந்த முதிய யாசகன்...!
*****
சில்லரைகளைத் தேடி
தட்டில் விழும் ஒலியோடு இணைந்து
தலையாட்டுகிறது
யாரோ ஒருவரின் வேண்டுதலை
நிறைவேற்றும் கோயில் மணி....!
*****
ஏற இறங்கப் பார்த்துச் செல்லும்
ஒருவரின் நேற்றைய கனவில்
தன்னைப் பார்த்த்தது போல்
வியந்து பார்க்கின்றது...
யாசகமிட்ட விரல்களை உடைய கண்கள்...!
*****
கை கால்கள் நன்றாகத்தானே உள்ளது,
உழைத்து வாழ் என
உபதேசம் செய்தவனின்
சட்டைப்பையில் மின்னுகிறது
லஞ்சத்திற்கு வண்ணமிட்டு
பல பூச்சியமிட்ட காகிதங்கள்.....!
- கவிஞர் சே. கார்கவி, நாகப்பட்டினம்.
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.