தனிமைக் காதலி

உன் கை சேர
காத்திருந்து உன்
மடியில் துயில ஏங்கும்
அன்புக்காதலி நான்!
உந்தன் விரல் பிடித்து
நடக்கும் தருணத்தில்
ஏனோ என் மனதில்
ஆனந்த அணிவகுப்பு!
உன்னையே நாளும்
தேடும் என் நெஞ்சம்
உன் நினைவில் மூழ்குவதும்
இனம் புரியாக் காதலே!
உன்னை நீங்கும் தருணம்
சுழலில் சிக்கியது போன்று
தவிக்கும் தவிப்பில் குத்தும்
ஈட்டியாய் என் உள்ளம்!
உன்னுள் மூழ்கித் திளைத்து
கலக்கும் நேரத்தில்
மட்டுமே முழுவதுமாய்
உணர்கிறேன் என்னையே!
என்னையே எனக்குரைத்து
புதுப்பித்து மீண்டும் முகிழும்
தருணத்தை தந்துதவும்
ஊக்கமும் நீதானே!
இதமாய் என்னுள் பிரவேசித்து
என்னை வழி நடத்தி
இலக்கு நோக்கி அடி
எடுத்து வைக்க உதவியவனே!
தாளாத துயரத்தில்
உன் மடி சாய்ந்தால் பல
காரணம் காட்டி என்னைத் தேற்றும்
ஏகாந்தமும் நீதானடா!
நல்வாழ்க்கையை நோக்கி
வழிநடத்த மானசீக
காதலியாக தத்தெடுத்து
ஐம்பொறிகளை அடக்கியோனே!
செவிலித் தாயாக
என்னை அரவணைத்து
சீராட்டி காத்து நின்று இவ்வுலகில்
ஒல்காப் புகழ் பெறச் செய்தோனே!
உன் கருவறையில்
என்னை அடைகாத்து
திருமொழிகளை விளங்க வைத்து
ஓதுதலில் துணை நின்றோனே!
என் பிழைகளை எடுத்தியம்பி
எல்லையில்லாப்
புரிதலை நல்கி
ஔவியம் அறுப்போனே!
நீ சத்தமின்றி கொடுக்கும்
முத்தத்தின் ரசிகை நான்!
உன் வருகையில் தான்
நான் உருகுவதும் கரைவதும்!
நீ தழுவும் நேரத்தில் மட்டுமே
என்னுள் அலாதி இன்பம்!
என் விழிகளில் கவி எழுத
விரும்புவாயோ தலைவனே!
(ஔவியம் : பொறாமை)
- செ. நாகேஸ்வரி, கெடார்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.