என் சமையலறை

என் சமையலறையில் நான்
சர்க்கரையாக இனிக்கிறேன்
உப்பாய்க் கரைகிறேன்
கடுகாய்ப் பொறிகிறேன்
பாலாய்ப் பொங்குகிறேன்
நெய்யாக உறுகுகிறேன்
குக்கராக விசிலடிக்கிறேன்
கிரைண்டராக அரைபடுகிறேன்
பெருங்காயமாக மணக்கிறேன்
அனைத்துமாய் நின்று
அரசாட்சி நடத்துகிறேன்!
அதுமட்டுமா!
என் சமையலறையில் நான் ஒரு பாடகி!
சமையலறை எனது கச்சேரி மேடை
பாத்திரங்கள் எனது இசைக் குழு
மகிழ்ச்சியெனில் கல்யாணி ராகம் அரங்கேற்றம்
கோபமெனில் அடானா ராகம் அரங்கேற்றம்
என் சமையலறையில் நான் ஒரு கணக்காளர்!
உப்பு, புளி, காரம் அளந்து போடுவதில்
என் சமையலறையில் நான் ஒரு கணக்காளர்!
மாத இறுதியில் மளிகை சாமான்கள் கணகெடுப்பில்
என் சமையலறையில் நான் ஒரு மறை வங்கி மேலாளர்
எனது வங்கியில் பல லாக்கர் உண்டு
அதில் சில... பருப்பு டப்பா, அரிசி டப்பா
அகழாய்வு செய்தாலும் அகண்டு ஆராய்ந்தாலும்
நானே ஆய்வாளர்!
என் சமையலறையில் நான்
ஒரு மருத்துவர்!
அஞ்சறைப் பெட்டி எனது மருத்துவ கிட்
என் சமையலறையில் நானே ராஜா, நானே மந்திரி
தினமும் ஒரு அரசானை வெளியிடும்
அதிகாரம் எனக்கு உண்டு!
சமையலறை என்னும் ஆய்வுக் கூடத்தில்
நான் ஒரு ஆராய்ச்சியாளர்!
புதியப்புதியக் கண்டுபிடிப்புகள்
நித்தம் வெளிவந்த வண்ணமிருக்கும்
என் சமையலறையில்
நான் நித்தம் ஒரு உயில் எழுதுவேன்!
மட்டன் பிரியாணி, சிக்கன் 65
ஆட்டுக்கால் பாயா, மீன் வருவல்
முட்டைப் பொறியல், முருங்கைக்காய் சாம்பார்
பூசனைக்காய் கூட்டு, இட்லி வடை தோசை
பூரி என என் சமையலறையில் நான்
சாதனைகள் பல படைக்கும்
பன்முகத் தன்மை கொண்டவள்
என் வீட்டுச் சமையலறை ஒரு அட்சயப் பாத்திரம்
விருந்தினர் வருகை என்றும் வரவேற்கப்படுகிறது
மொத்தத்தில் எனது சமையலறையை
நான் காதலிக்கிறேன்!
- சாந்தி சரவணன், சென்னை.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.