சிதை

காதலித்துக் கரம் பிடித்தால்
கண்ணியமாக வாழலாம்
என்ற கனவுகள் நிரம்ப!
காதலன் தந்த காதல்
சில நாட்களில்
கண்ணீரோடு
கைகழுவிப் போனதை
மனதால் உணர்கிறாள்
அனைத்தும்
துறந்த நிலையில்!
நினைத்துப் பார்க்கிறாள்
ஓடுகாலி என்ற பட்டத்தை
படிக்காமலேப் பெற்றுவிட்டதை!
காதலனோ கை கழுவ
வறுமையோ தோல் தழுவ
வேலைக்குச் செல்கிறாள்!
சமூகம் தந்த பட்டம் சுமந்து
அவமானத்தைச்
சுமந்தவளாய்
கலங்கித் தவிக்கிறாள்!
தான் ஒரு அனாதை
என்ற எண்ணம்
மேலோங்கி
கல்லாய் இதயம் கனக்க!
உரசிப் பார்க்கிறது
இச்சமூகம்!
வேலைக்குச் சென்று வீடு
திரும்பும் வரை!
பழிகளைச் சுமந்தவளாய்
மௌனத்தின்
கை கோர்த்து
வெண்ணீர் குளங்களாய்
அவளது கண்கள்!
சமூகமோ! அவளைப்
பார்வையால்
பசி தீர்க்கிறது!
மனமுடைந்து
பரிதவிக்கிறாள்!
கனத்த இதயத்துடன்
கைகளில் கற்பை
இறுக்கிப் பிடித்தவளாய்!
காதலித்த கள்வனோ
கை விட்டான்
தாகம் தீர்ந்த பின்!
என் செய்வாள்
பேதைப்பெண்!
காதலித்தக்
குற்றத்திற்காக
அவள் உணர்வுகளுக்கு
சிதை மூட்டுகிறாள்!
உடலைத் தேடிய காதலால்
தாய் வீடோ
உதறிப் போனது!
மனம் நிறைந்த சுமையுடன்
தன் தவறை
உணரும் தருணம்
அனைத்தையும்
துறந்த நிலையில்!
மனம் தாளாமல்
தன் உயிருக்குச் சிதை
வளர்க்கிறாள்!
- செ. நாகேஸ்வரி, கெடார்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.