ஆசை வண்டி
அஞ்சாறு வயசினிலே - என்
கனவெல்லாம் அதுதானே...!
கப்பலும் அதுதானே
கார் வண்டியும் அதுதானே
அப்பாவின் மிதிவண்டி - எனக்கு
அரசன் வரும் தேர்தானே!
உக்காந்து நானும் வர
அப்பாவும் அத ஓட்டி வர
மரமெல்லாம் ஓடி வரும் - அது
எங்க வண்டியப் பார்க்க வரும்!
தெருவெல்லாம் இருக்கும் பள்ளம்
சில நேரம் துள்ள வைக்கும்
தெரு மூல பெல்லுச் சத்தம்
தேவலோகம் கேட்டு நிக்கும்!
இறக்கத்தில் போகும் போது
வேகமாக் காத்தடிக்கும்
ஓட்டியது அப்பாதான் - ஆனா
என் மேனி புல்லரிக்கும்
முள்ளுக்குத்திச் சில நேரம்
காத்தெல்லாம் போயிருக்கும்
மூச்சடங்கிப் போனது போல் - அது
என் கண்ணில் நீரிறைக்கும்!
சாமத்துக் கோயிலுக்கு
சடங்குக்கு நாங்க போனா
சாமி கூடத் திரும்பிப் பார்க்கும் - அது
சடங்குக்கு டைனமோ வெளிச்சம் கேக்கும்!
காசில்லாக் காலத்திலே
நான் ஏறிப் போன வண்டி
கார் வந்த பின்னும் கூட - எனக்கு
அது தானே ஆச வண்டி...!
- சசிகலா தனசேகரன், திருவண்ணாமலை
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.