கல்வி
வெற்றியே வாழ்வினில் வேண்டுமெனில் யாருமே
கற்றிட வேண்டுமே கல்வியை - கற்றவரே
காசினி தன்னிலே கண்ணுடையோ ரென்றதையே
நேசித்துக் கற்றே நிமிர்...!
கற்றிடல் செல்வமெனக் கண்டதைக் கற்றேதான்
பெற்றிடு வாழ்வினில் பேறெலாம் - கற்றவரே
மற்றவர் முன்னே மதிக்கப் படுவதால்
பற்றுடன் கற்றுநீ பார்...!
பெற்றவை யெல்லாமே பேறல்ல கற்றிடு,
வற்றும் வறுமையிலும் வாடாதே - கற்றவரே
எவ்லாமே பெற்றதா யென்றும் கருதியே
கல்வியில் வைத்திடு கண்...!
முற்று மறிந்திடா மூடரைப் பாரதில்
சற்றும் மதிப்பதிலை சார்ந்தெவரும் - கற்றவரே
செல்லு மிடமெலாம் சேர்ப்பர் புகழினையே
கல்வியா லீதெனக் காண்...!
குற்ற மிலையே குறைந்திடில் செல்வமே,
கற்றது தந்திடும் கண்ணியம் - கற்றவரே
எல்லாம் பெறுவர் ஏற்றமே வாழ்வினில்
நல்லதே காணலாம் நம்பு...!
- செண்பக ஜெகதீசன்.
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.