ங்கா... தாலாட்டு!
உலக மொழிகளின்
ஒப்பற்ற மொழி
உயிர்களை ஈர்க்கும்
மழலை மொழி
ஆடும் தூளியில்
அழகு சிரிக்கிறது
எட்டிப் பார்க்கும் கடவுள்
வேடிக்கை காட்டுகிறது
இறைவன் திருவடி
எங்கே காணலாம்
தூளியில் நீட்டிக் காட்டும்
குழந்தையின் மலர்க்கால்களில்
ஏழையின் குடிசையில்
பழைய சேலை பெருமிதம்
தூளியாகக் கட்டப்படும்
சுகானுபவத்தில்
அம்புலி வந்து
எட்டிப் பார்க்கும்
சோறூட்டும் குழந்தையின்
தாயின் கரத்திற்கு நேர்
தாயின் இடுப்பே
குழந்தையின் தேர்
அமர்ந்து கொண்டு பார்க்கும்
தேர்த் திருவிழா
கைகளில் தவழும்
பாரமல்ல குழந்தை
கண்முன்னே உலவும்
கடவுளின் சொர்க்கம்
ங்கா எனும் மொழி
பிரபஞ்ச மொழி
இதுவே இறைவன்
நமக்குணர்த்தும் மறைமொழி
- இளவல் ஹரிஹரன், மதுரை.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.