தொட்டிச்செடி
விதையொன்று உயிர்ப்பாகும் கவனம்
என்னைச் சுற்றி
முளைவிடும் முன்னே கிளைவிடும்
கனவுகள் எனக்குள்ளே
சின்னசின்னத் தளிர்கள் என்னிலிருந்து
துளிர்விடத் தொடங்கின
கவனக் குவியலில் ஒற்றைப்
பூ ஒன்றை
என் மேனி சிறுமுகையாய்
இதழ் வெடித்தது
உடனே மணல்மாறி மடைமாறி
சூழ்நிலைகள் விலங்காயின
மற்றுமொரு சாளரத்தின் பின்னே
நான் நிற்கிறேன்
என்தளிர்கள் துளிர்த்து தலைநீட்டும்போது
ஒவ்வொரு முறையும்
கத்தரிக்கோல்கள் என் சிறகுகளை
வெட்டத் துவங்கின
எப்போதேனும் காணக் கிடைக்கும்
சாளரத்தின் வழியே மட்டும்
அவ்வப்போது நீளும் என்னுலகம்
எனை நோக்கும்
வெறுப்பான பார்வை ஒன்றில்
பொசுக்கிப் போகும்
என் அழகுப் பூக்கள்
பெறுகிற கவனம்
என் வேர்களுக்கு இல்லை…
என் இலைநரம்புகள் மண்ணையும்
மழையையும் மறந்து
மறத்துப் போயின, வேர்களோடும்
என்நிலமென்ற ஒன்றை
காணாமல், கனவில் மட்டும்
காட்டுச் செடியாகி
என் மொட்டுகளில் கண்ணீரை
நிரம்பி வைக்கிறேன்
தேனென்று அமுது கொள்பவர்க்கு
தெரிவதில்லை – சிறகு
வெட்டப்பட்ட தேவதைகள் உங்கள்
சாளரங்களின் பின்னால்
தொட்டிச் செடியாக அசைவது… … ...
- முனைவர் பி. வித்யா, மதுரை.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.