அறிவுடையார் எல்லாமுடையார்!
பெருஞ்செல்வம் உடையவர்கள் அதனைக் காக்க
பிழையான அறிவிருப்பின் இழந்து போவர்
அருஞ்செல்வம் கல்வியெனும் அறிவு கொண்டோர்
அகத்தினிலே பட்டறிவும் தெளிவும் உள்ளோர்
பொருட்செல்வம் இலரேனும் நட்ட மில்லை
புவியினிலே அறிவுடையோர் உடையார் எல்லாம்
கருத்தாகப் பொருள்காக்க அறிவு வேண்டும்
கைப்பொருளும் இழந்துநிற்பர் அறிவில் லாதார்.
பொருள்செய்யும் வகையறிந்து காக்க வேண்டும்
பொன்மண்ணும் வாழ்வினிலே நிலைக்க வேண்டும்
இருள்நீக்கும் ஒளியதனை ஏற்ற வேண்டும்
இவ்வறிவே இல்லாதார் உடைமை யாகப்
பெரும்பொருளைக் கொண்டாலும் ஒன்றும் இல்லார்.
பேணுகின்ற நல்லறிவு கொண்டோர் வாழ்வில்
ஒருபொருளும் இலரேனும் உடையார் எல்லாம்
உரைசான்ற குறள்மொழியும் உலகோர்க் கெல்லாம்.
பெருமைபடைத் திவ்வுலகில் பிழைக்க வேண்டின்
பேரறிவால் எல்லாமே சொந்தங் கொள்வர்
தருக்கில்லாப் பகுத்தறிவோர் அகிலம் போற்றத்
தாங்கிநிற்பர் அனைவரையும் தம்மோ ராக.
நெருப்பினிலே புடம்போட்ட தங்க மாக
நிலைத்திடுவார் மதிப்புடனே நெஞ்சில் என்றும்
பொருப்பினிலே பிறந்துவளர் தென்றல் போலப்
புவிவெல்வார் அறிவுடையோர் எல்லாம் பெற்றே.
- இளவல் ஹரிஹரன், மதுரை.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.