மகிழ்வேப் போற்றி...!

அதிசயமாம் அதிசயம்
ஆயிரமாம் அதிசயம்
நான்மாடக் கூடலெனும்
நன்மதுரை அதிசயம்
நல்லதமிழ் பேசுகின்ற
சங்கத்தமிழ் அதிசயம்
நாலு மலை காவல் காக்கும்
நம்ம ஊர் அதிசயம்
யானை கட்டிப் போரடித்த
பாண்டி நாட்டு அதிசயம்
வயலெல்லாம் ப்ளாட்டாக்கி
வாழ்வதுவும் அதிசயம்
இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக
இங்கிருக்கும் அதிசயம்
எங்களன்னை மீனாட்சி
ஆலயமே அதிசயம்
ஆறுமாதம் சுந்தரரும்
ஆறுமாதம் பிராட்டியும்
ஆளுகின்ற மாமதுரை
ஆலயமே அதிசயம்!
நான்மாடக் கூடலாம்
நன்மதுரை பெற்றெடுத்த
நாயகியே நகர் நடுவே
நல்லகிளி கையேந்தித்
தூண்தாங்கும் கருவறையில்
தூயவளாய் நின்றருளும்
தொன்மமிகு கோவிலிலே
துணையாக நிற்பவளே
காஞ்சனைக்கும் துவஜனுக்கும்
கலிதீர்க்க மகவாகக்
கருணைபுரி யாகத்தில்
கனலிடையேத் தோன்றியவள்
மீனாட்சி பெயர்கொண்டு
மீன்குஞ்சைக் கண்களினால்
மேற்பார்வை யால்காத்து
மேதினியிற் சிறந்தவளே
தானாட்சி புரிநகரில்
தனிக்கருணை யால்புரந்து
ஜீவாத்மா உய்விக்கும்
செயலருளும் கயற்கண்ணி
திக்விஜயத் திருவிழவில்
திசையெண்மர் தமைவென்று
முன்வந்த முக்கண்ணர்
முகம்பார்த்த நாணத்தில்
முத்தனத்தில் ஒன்றிழக்க
முழுமதியாய்ப் பூத்தமகள்
கல்யாணத் திருக்கோலங்
கண்டமரச் சுந்தரரின்
கரம்பற்றி நின்றருளும்
ஆலவாய் அம்மையே
அன்னைமீனாட்சியே...!
மாமதுரை மகுடமென
மங்கைமீனாட் சிகோயில்
ஆலவாய் அண்ணலும்
அங்கயற் கண்ணியும்
கடம்பவனம் சூழக்
இந்திரன்தன் தோஷமகல
எழுப்பிப் பூசித்த கோயில்
விண்ணுயர்ந்த கோபுரங்கள்
வியன்மதில்சூழ் நற்கோயில்
எண்திசையானைகள்
எழிலுறத் தாங்குகின்ற
ஆலவாய் அண்ணலாம்
அருள்மிகு சுந்தரேசர் ஆலயம்
பாண்டியன் ராஜசேகரன்
பரிவினால் கால்மாறி
பதஞ்சலி புலிக்கால் முனிவர்
பார்த்திருக்க நடம்புரிந்த
திருக்கோலம் வெள்ளிசபை
நடராசர் திருக்கோலம்.
கிழமேலாய் நடுக்கோடு
கிழித்தாலே கருவறையின்
லிங்கத் திருமேனி நடுவில்
சரிபாதியாய்ப் பிரிக்கின்றன
கிழக்கு மேற்கு வாசல்கள்
தென்வடலாய்க் கிழிகோடு
கருவறையைச் சரிபாதியாய்ப்
பிரிக்கின்ற நூதனம்
முந்தையர் கலைச் சீதனம்
கட்டடக் கலைச்சீதனம்
அம்மையின் நுழைவாசல்
அட்டமாசக்தி மண்டபம்
திருவாச்சி வாசல் கடக்க
தென்படுமே பொற்றாமரைக் குளம்
சங்கத் தமிழ் அரங்கேறச்
சங்கப் புலவர் நிறைந்த இடம்
தென்கிழக்கில் விபூதிப்
பிள்ளையார் அருளோடு
திரும்பினால் கிளி மண்டபம்
கிளிகளிடம் வேண்டுதல் சொல
கிளி பறந்து அன்னையிடம்
மொழிபகரும் வரமருள
நலமருளும் அதிசயம்
முக்குறுணி விநாயகர்
முன்னிற்கும் அதிசயம்
மடப்பள்ளி திருநீறு
நோய்தீர்க்கும் அதிசயம்
நாளெல்லாம் விழாக் காணும்
தடாதகையின் அதிசயம்
இமைக்காத விழிகளுடன்
என்றுமருளும் அதிசயம் ஆனதால்
தூங்காநகராய்த் தோன்றிவிட்ட
மாமதுரை அதிசயம்.
ஆடற்கலை வல்லானின்
அறுபத்து மூன்றினிலும்
பெரும்பான்மை ஆடல்கள்
பெருமைகண்ட மாமதுரை
சொக்கரின் அழகில் சொக்கி - தினம்
சுந்தரத் தமிழால் ஓதி
மனம் தக்கதோர் நிலையடைந்து
எனைத் தாங்கிடும் தாயே மீனாள்
உன் மிக்கதோர் கருணை அன்பால்
நலம் மேன்மையில் கூடும் வாணாள்
எழில் சொக்கியே மதுரைத் தாயே
என் சொந்தமே மகிழ்வே போற்றி.
- இளவல் ஹரிஹரன், மதுரை.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.