அன்னை மீனாட்சியே அருள்க...!
அன்னையே அன்னையே அன்னைமீ னாட்சியே
உன்னையே உன்னையே அனுதினம் தொழுதனன்
என்னையே என்னையே எழிற்கயற் கண்களால்
முன்வந்து காத்திடு முத்தமிழ் பாடவே.
நாவாடும் சொற்கள் நடனமிடும் வாக்கில்
நல்லகவி தையாகச் சூட்டு கின்றேன்
நான்மாடக் கூடல் நங்கையுனை வாழ்வில்
நல்லதுணை யாகமிகப் பெற்று நின்றேன்
பூவாடும் சோலை பூக்களெலாம் உந்தன்
புன்னகையாய் மலருவதாய்ப் பாடு கின்றேன்
பொய்யாடும் உள்ளம் புறந்தள்ளி விட்டுப்
புதுவாழ்வின் ஒளிமிக்க மெய்யைக் கண்டேன்
தீவான வாழவின் திசையெல்லாம் மீனாள்
தீபத்தின் ஒளிபார்த்து மகிழு கின்றேன்
தினையளவு நல்ல,செயலதனைப் பார்த்துத்
திரும்பவரம் தரப்பார்த்து நெகிழு கின்றேன்
காவாது காக்கும் கண்களினைக் கொண்ட
கருணைபொழி மதுரையம் பதியின் தாயே
கால்பிடித்தேன் உந்தன் கைப்பிடித்தேன் சேயன்
கனிந்தமுகம் பார்த்துதினம் அருள்க நீயே.
- இளவல் ஹரிஹரன், மதுரை.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.