ரயில் நிலையம்
பெட்டியிலிருந்து இறங்கினேன்
நெரிசலில் முண்டியேறிப் போகிறது
அழகியல் வண்ணத்துப்பூச்சி.
*****
பிளாட்பாரப் பெஞ்சில்
தனிமையில் காத்திருந்தேன்
துணைக்கு வந்தமர்ந்தது காகம்.
*****
பிளாட்பாரத்தில் நிழல் கொடுத்த
மரங்கள் அழிக்கப்பட்டன
அசைவின்றி சிமெண்ட் நிழற்குடைகள்.
*****
பிளாட்பாரத்தில் இருக்கும்
கோயில் பெயர்
ரயில் பிள்ளையார்.
*****
யாரை வரவேற்கப்
பிளாட்பாரப் பெஞ்சில் அமர்ந்து
காத்திருக்கிறது சிட்டுக்குருவி.
*****
பச்சை, சிவப்பு
இரு வண்ணக் கொடிகளே
ரயிலுக்குக் குறியீட்டு மொழி.
*****
பிளாட்பார டிக்கெட் இல்லாமல்
உள்நுழைந்து உலாவுகிறது
துணிச்சலான நாய்.
*****
யாருமற்ற பிளாட்பாரப் பெஞ்ச்
உதிர்ந்த வேப்பிலைகள்
மரத்தின் மேல் கீச் குரல்.
*****
குடும்பத் துயர் நினைவுகள்
தனிமையில் பேசித் தீர்ப்பதற்குத்
தகுந்த இடம் பிளாட்பாரம்.
*****
உறங்காத தண்டவாளங்கள்
வருவதும் போவதுமாக
விழித்திருக்கும் ரயில் நிலையம்.
- நடேச கணேசன், வேலூர்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.