குடும்பம்

மூன்று தலைமுறைகள் ஆகின
கிராமத்தில் மிகப் பெரியது
அம்மா வாழ்ந்த வீடு.
எது செய்தாலும் எப்பொழுதும்
குற்றம் கண்டுபிடித்து அப்பாவைக்
குறை சொல்வாள் அம்மா.
எப்படியோ அப்பாவை
தாசா பண்ணி நகைநட்டு
வாங்கிடுவாள் அம்மா.
பூனைக்குப் பசி மியாங்குரல்
பிஸ்கெட் போட்டார் தாத்தா
அதட்டி விரட்டினாள் பாட்டி.
தம்பிக்கு ஆன்லைன் பாடம்
கற்றுக் கொடுக்கத் தயங்கினாள்
புரியாமல் தவித்த சின்ன அக்கா.
மனம் வதைக்கும் அத்தையின்
குத்தல் பேச்சில் எல்லோருக்கும்
எப்பொழுதும் கொஞ்சம் பயம்.
முகம் வாடி சோகமாய்
வீட்டின் அறையில் தனிமை
புருஷனை இழந்த சித்தி.
நிம்மதியற்று மனஇறுக்கமுடன்
செலவுகள் சமாளிக்கத் திணறும்
குடும்பப் பாரம் சுமக்கும்
மூத்த பிள்ளை.
எனக்கு யாரும் நாதியில்லை
எப்படியிருக்கேன்னு கேட்பாரில்லை
ஒரு பாட்டம் அழுது போவாள்
பெரியம்மா.
அவ்வப்போது நேரில் வந்து
கலகம் செய்துவிட்டு
வேண்டியது வாங்கிப் போவாள்
அண்ணி.
செல்போனில் மகள்
உற்றுக் கவனிக்கும் பூனை
கணவன் மனைவி சர்ச்சை.
உடைந்த அழகு பொம்மை
ஒட்ட வைக்கும் முயற்சி
வெற்றி மகிழ்வில் குழந்தை.
படுத்தப் படுக்கையில் அப்பா
கிறுக்குப் பிடித்த நிலையில் அம்மா
பூசையறையில் ஊதுபத்தி வாசம்.
வேம்பு வளர்த்தார் அப்பா
முருங்கை வளர்த்தாள் அம்மா
ரெண்டும் வெட்டியெறிந்தான் மகன்.
சொத்து கைக்கு வந்த பிறகு
சமாதி கட்டினான் மகன்
அப்பா உழைத்த நிலத்தில்...!
- நடேச கணேசன், வேலூர்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.