மௌன சுமை
தேனீரகத்தில் தேனிர் பருகிய குவளைகள்
இடக்கைக்கு மாற்றப்பட்டு துடைக்கப்படுகிறது மேசை!
அணுதினம் காலையிலிருந்து இரவுவரை துடைத்தலின்
எண்ணிக்கையை அறிய மூளை முற்பட்டதில்லை!
தன்மீது விழும் பார்வையை புறக்கணித்துவிட்டு
மௌனமாய் துடைக்க முற்படும் முன்னங்கைகள்!
தொடர்ந்து துடைக்கும் இரு கைகளும்
தம்வலியை வாய்விட்டு சொல்லி அழுததில்லை!
காரணமாய் ஏதோ திணிக்கப்பட்ட சுமையோ?
கைவிடப்பட்ட கதையோ? நெஞ்சை நிறைந்திருக்கக்கூடும்!
மேசையைத் துடைக்கும் தருணத்தில் அவள்
கைகளும் ஏங்கியிருக்கலாம் ஆசுவாசமாய் தேனீர்பருக!
- செ. நாகேஸ்வரி, கெடார்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.