என்னை எட்டுவது எப்போது?
செல்லிடப்பேசி சிணுங்கும் போதெல்லாம்
சிந்தை சிறகடிக்கிறது...
அழைப்பில் யாராக இருந்தாலும்
அகம் உன்னை மட்டும் அசைபோடுகிறது...
உன் மொழியிலா நாட்கள் வலியோடு
வாழ்வில் வழியிழந்து நீள்கிறது...
காசினியில் கதிரவனின் விடியலைக்
காணா பறவையாய் தவிக்கிறது...
விரைவிலா அறிவியல் வளர்ச்சியை
விரக்தியில் கடிந்தே நோகிறது...
நூறுமுறை நிழற்பட முகம் பார்த்து
மொழியின் முகவரி நினைவாகிறது...
ஊற்றாய் உள்ளத்தை நனைக்கும்
வார்த்தையின்றி வெந்து துடிக்கிறது...
எட்டி நிற்கும் என்னவளே
உன் குரலோசை என்னை எட்டுவது எப்போது ?
- விருதை சசி, விருதுநகர்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.