பூனை கவிதைகள்
என்னைப் புறந்தள்ளி
புசுபுசு பூனைக்குட்டி
அம்மா மடியில்.
*****
அம்மாவுக்கு ரெண்டு பிள்ளைகள்
மூன்றாவது செல்லப் பிள்ளை
குறும்பு பூனை.
*****
மாடிப் படிக்கட்டின் கீழ்
ஒதுக்குப் புறமாய் எப்பொழுதும்
பூனை தனிமை வாசம்.
*****
தூங்குவது போன்று பாசாங்கு
யார் காலடிச் சத்தமோ? கேட்டு
சட்டென விழித்தது பூனை.
*****
டீ கொதிக்கும் நறுமணம்
மெல்ல உள்ளே நுழைந்தது
சமையல் அறைக்குள் பூனை.
*****
கருப்பு பூனை ஒன்றே
பாழடைந்த வீட்டின்
தற்போதைய உரிமையாளர்.
*****
நான் சிறுவனாய் இருந்தபோது
அந்த பூனை தான்
என் விளையாட்டு தோழன்.
*****
திருட்டுத்தனமாய் நுழைந்து
என் படுக்கையறை நுழைந்து
வேவு பார்க்கிறது பூனை.
*****
விழிகளில் காந்த சக்தி
யாருக்கும் வியப்பூட்டும் பார்வை
பூனையின் நீலக் கண்கள்.
*****
சிலிர்ப்பில் அசைந்தது
மீசையால் மென்மையாக
எனது கால்களை வருடிய பூனை.
- நடேச கணேசன், வேலூர்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.