அப்பா
குளித்ததும்
எண்ணெய் பூசி
வகிடெடுக்கும்
உன் சிகைக்குள்
உன் மனதைப் போலவே
சாயம் பூசாத
வெண்மயிர்…
உம் நடுநெற்றியில்
வந்திட்ட சிறு சுறுக்கம்
எம் வாழ்வின்
மீள்பார்வைக்கு
நுண்நோக்கியாய்…
நீர், வயது பதினான்கில்
உழைக்கத் தொடங்கியதாக
யாரோ சொன்ன நியாபகம்
இன்று எழுபத்து ஆறிலும்
உன் கை கனக்கும்
மஞ்சப்பை…
அளவை மிஞ்சியே
அன்பால் எஞ்சும் அப்பை
தரைதொடும் முன்னே
துலாவும்
எம் கரங்களில்
அடுக்கடுக்காய்
நினைத்தவை…
இன்னும் தங்கள்
அகம்படா – உம்
கிழிந்த பனியனில்
எமக்கு அகப்படாமலேயே
அகம்படுகிறது
அப்பனாய்
அரும் வாழ்க்கை…
உம் மார்மேல்
படுத்துக்கொண்டு
உம் பனியனின் ஓட்டைக்குள்
விரல்விட்டுத் துலாவும்
உன் பெயர்த்திக்கும்
எனைப்போல்
வசப்படட்டும்
வாழ்க்கை மீன்பிடிக்கும் கலை…
இப்போதெல்லாம்
அடங்கமறுக்கும் - உம்
கபம்சிந்தும்
இருமலை
எனைக் கண்டதும்
அடக்கும் விந்தை
வசப்பட வாய்ப்பில்லை
எனக்கு…
‘அப்பாவ ஆஸ்பத்திரிக்கு…’
என்ற பேச்செழுந்ததும்
சிரத்தைக்கு வழிதராது
புறப்பட மஞ்சப்பை தேடும்
புத்தனே!
உன்னிடம் மட்டும்தான்
போதி மரமாகிறது
ஆசையும் பேராசையும்…
- முனைவர் கோ. சுனில்ஜோகி, கோயம்புத்தூர்.
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.