பிரியாத வரம் வேண்டும்
பிரியத்தைக் கேட்டால்
பிரிவை மட்டுமேத் தருகிறாயே?
உனக்கொன்று தெரியுமா?
இப்பிரபஞ்சத்தில்
உயிரற்றுக் கிடக்கும்
ஒரு சிறு துரும்பு கூட
உன் நினைவுகளை
தூசி தட்டி விட்டுத்தான் செல்கிறது.
என் கற்பனைகள்
கஞ்சத்தனமின்றி
கட்டுக்கடங்காமல்
உன்னைச் சுற்றியே வலம் வருகின்றன.
காதல் வாழ்க்கையின்
ஒரு பக்கமாம்
யார் சொன்னது?
என் வாழ்க்கைப் பக்கங்களிலெல்லாம்
நீயே நிறைந்திருக்கிறாய்
உன்னைச் சந்தித்து
பின்னர் சிந்தித்து
என்றும்
நொந்து கொண்டது எல்லாம் போதுமடி
வரம் நீ
சாபம் ஏனடி
எனக்குப் பரிசாகத் தந்தாய்?
அந்தக் கருணையுள்ள
கடவுளிடம்
நேருக்கு நேராய்
உரக்கச் சொல்கிறேன்
கண்ணை மூடித்
தவமிருக்க வேண்டுமா?
பட்டினி கிடந்து
விரதமிருக்க வேண்டுமா?
கை நரம்புகளைக் கிழித்துக் கொண்டு
இரத்த அபிஷேகம்
செய்ய வேண்டுமா?
அவளுக்காக
எதையும் செய்வேன்
அவளை இழப்பதைத் தவிர
இன்னொரு ஜென்மமாவது
அவள் பிரியத்தை
பிரியாத வரம் கொடு இறைவா!
நீ... ஈவு, இரக்கமுள்ளவன் என்று
என் கல்லறையின் மேல்
இறுதி சாசனம்
எழுதி விட்டுச் செல்கிறேன்.
- நௌஷாத்கான். லி, சோழபுரம், கும்பகோணம்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.