வெற்றிப் பயணம்
ஒவ்வோர் உயிர்க்கும் ஒவ்வொரு பயணம்
ஒவ்வொரு பயணம் வெவ்வே றிலக்கு
பாதை நீளும் பயணம் தொடரும்
வாதை இன்பம் வாழ்வில் படரும்
எல்லாம் இருந்தும் எதையோ இழந்தும்
செல்லா வாழ்க்கை சிறப்புறச் செய்தல்
அவரவர் முயற்சி அவரவர் வினைத்திறன்
எவரெவர் வாழ்வும் எவர்கை யிலுமிலை
உன்முன் பாதை உவப்பாய் இருக்க
உன்முன் பயணம் உனதாய் இனிக்க
நேர்மறை எண்ணம் நெஞ்சில் நிறுத்து
நேர்வரும் துயரை நின்று கடத்து
வெற்றிப் பயணம் விழைவாய்க் கொள்ளு
சுற்றும் பூமியில் சுழன்றுபோ ராடு
வாழ்வின் இலக்கை வகையாய்த் தெரிந்தெடு
தாழ்வு உனக்கிலை தகர்த்தெறி தடையினை
ஏழ்மை வறுமை எண்ணம் துடைத்தெறி
கீழ்மை என்பது கேலியு மில்லை
நாளும் கிழமையும் நலிந்தோர்க் கில்லை
ஆளுமை உன்னிடம் அதிக முண்டு
தோளை நிமிர்த்து துணிவுடன் செயல்படு
ஆளை யறிந்து அன்பு செலுத்து
வாழும் உலகுன் வசமா யாகும்
வீழும் தோல்வி விலகிப் போகும்
வெற்றிப் பயணம் உனதே
பற்றிக் கொள்ளப் பாரும் இனிதே...!
- இளவல் ஹரிஹரன், மதுரை.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.