இலவு காக்கும் கிளிகள்

சைரன் வச்ச வாகனமே!
சட்டை கசங்காத சம்பளமே
பச்சை மை கையெழுத்தே
பத்து நிமிடம் நில்லுங்க
ஏட்டைப் புரட்டிப் புரட்டியே
இருபது விரலும் தேஞ்சி போன
போட்டித் தேர்வு மாணவர்கள்
புலம்புவதைக் கேளுங்க
அடிமானமில்லா அபலைப் பெண்களின்
பிடிமானமிந்த அரசுப்பணி
குழல் விளக்கில்லா குடிசைப் பட்டதாரிக்கு
கோபூர தீபமிந்த அரசுப்பணி
மக்களுக்கு சேவை செஞ்சிதான்
மக்கிப்போக வேண்டுமன்று
உக்கிரக்கனவு ஒன்று தோன்ற
சர்க்காரு வேலைக்குப் படிக்க வந்தோம்
நம்மால நம்ம ஊரு மாறிடும்
தன்னால தண்ணி வந்து சேர்ந்திடும்
பின்னால இருக்குற பிச்சாண்டிவீட்டுக்கு
முன்னாலயும் மின்விளக்கு ஏறிடும்
அனாதைப் பணத்துக்கா அலையுறாளே
அங்கம்மா கெழவி
இனியாச்சும் அவக்காதில்
இனிப்பு சேதி சேந்திடும்
பொன்னான கனவெல்லாம்
கண்ணோரம் கண்டோம்
பொழுதெல்லாம் படிச்சிப் படிச்சிக்
கண்ணுறக்கம் கொன்றோம்
இருபதுக்கு மேல புத்தகமெடுத்தா
இருப்பவங்க என்ன மெச்சிப்பாங்களா?
இருப்பதற்கே ஆக்கிப் போட இயலாதப் பெத்தவங்க
எங்களையும் வீட்டுல வச்சிப்பாங்களா?
ஆல மரத்தடியிலும்
அலுவகப் படியிலும்
பூங்காப் புதர்மடியிலும்
புயலடிக்கும் மழையிலும்
வீங்கிப்போன விழிகள் கொண்டு
விழுந்துவிழுந்து யாம்படித்தோம்
கொசுக்கடியும் மருத்துப்போக
கூடியமர்ந்து குறிப்பெடுத்தோம்
குழந்தைய பசியாத்தும் தாயிடமிருந்து
குழந்தைய பாதியில் பிடுங்குதல்போல
பாதியில வந்து எங்க பாடத்திட்டம் மாத்துனீங்க
தமிழுக்கு முதன்மைன்னு தந்திரத் திட்டம் தீட்டினீங்க
பரவாயில்ல சாமியென்றோம்
பாத்துக்கலாம் படிப்போமென்றோம்
தமிழுக்காக எத்தனை
தடை வந்தாலும் தகர்ப்போமென்றோம்
வந்ததது தேர்வல்ல
வைரசுகிருமி யென்றார்
வாயுவழி பரவுதடா
போயி வீட்டைப் பூட்டுயென்றார்
கொரோணா சிறைவாசம் முடிந்து
வராதா தேர்வெனவிருந்த போது
வந்ததோ பழைய பாடத்திட்டம்
வெந்தது நீங்க போட்ட சட்டம்
புதிதாய் போட்ட சட்டமெல்லாம்
புரோட்டா சூரி கணக்கென்றீர்
தீயில் வெந்து வந்த எம்மை
திரவாகக் குளியல் குளியென்றீர்
ஆண்டுக்கொரு திட்டம் போட்டு
ஆறு மாசம் தொட்டீங்க
ஆட்சிக்கொரு சட்டம் போட்டு
அலைக்கழிக்க விட்டீங்க
தேர்வு முடிவில் ஊழல் வந்தா
திருத்தக் கொஞ்சம் சொரிச்சீங்க
உங்க கவனக் குறைவுக்காக
எங்க கழுத்தை நெரிச்சீங்க
சீர்திருத்த விதிமுறைகள்
எங்கள் சிரசின் பாரம் கூட்டியது
கருப்பு மை புரட்சியெலாம்
உறுப்பை நெருப்பாய் ஆக்கியது
அப்பா அம்மாவிடம் அனுமதி வாங்கி
அழது முடிச்சி ஆயத்தமாகி
எழுதி முடிச்சோம் தேர்வினை
இன்னும் முடிவைக் காணல
அரசுப்பணி கருவைச் சுமந்து
ஐந்தாண்டுக்கும் மேல ஆச்சி
பிரசவிக்காமல் கருக்கள் சில
பிஞ்சுலேயேக் கரைஞ்சி போச்சு
தலைமுறை காக்கப் படிக்க வந்தாம்
தலை மயிரெல்லாம் நரைச்சிப் போச்சு
படிக்க வந்த நோக்கங் கூட
பாலைப் போல திரிஞ்சி போச்சு
ஆள் சேர்ப்பு ஆணையமே உந்தன்
கால் முறிந்து போனதோ?
நன்றாய் நீயும் நடை நடத்து
நாள் ரொம்ப ஆனதோ?
ஏ! எரிபொருளில்லா எந்திரமே
எங்கள் அடிவயிற்றுக் கனலை அள்ளிக் கொள்
உயவு எண்ணெய் தேவையெனில்
எங்கள் உதிரம் சேர்த்து உறிஞ்சிக் கொள்
தாமதிக்கப்படும் நீதி
அநீதிக்குச் சமமாகும்
தாமதிக்கப்படும் முடிவு
தகுதியற்ற முடிவிற்கு வழிகோலும்
இழுக்கப்படாத தேர்வாணையத் தேரே
இப்பொழுதேனும் எங்கள் நிலையறி
பிறக்கப் போகும் பிப்ரவரிதான்
ஒவ்வொரு தேர்வர்க்கும் சனவரி
நீ சூடு பிடித்து சோம்பல் முறித்து
சொல்லும் முடிவில்தான் இருக்கிறது
எழதி முடித்துக் காத்திருக்கும்
இளைஞர் கூட்டமெல்லாம்
இந்தியாவைச் செதுக்கப் போகும் உளிகளா?
இல்லை, இலவு காக்கும் கிளிகளா?
- விமுகா, கோ. பவழங்குடி, கடலூர் மாவட்டம்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.