பிச்சைப் புகினும் கற்கை நன்றே
மண்ணில் நல்லதொரு மாண்புகளை விதைத்திட
புண்ணென நிற்கின்ற வறுமைதனை ஒழித்திட
கண்ணெனத் தகும் எண்ணினை எழுத்தோடு
தண்மையுடன் தரணியில் கற்றல் நன்றே…
சாதியில்லா சமத்துவமாய் வேதங்கள் ஓதிட
வேதியியல் அறிவோடு வேளாண்மை ஊன்றிட
மதியினில் நிறைவான மருத்துவம் பழகிட
கதியென்றே கரமேந்தி கற்றல் நன்றே…
இனியதொரு திகட்டா கனியை சுவைத்திட
தனியா தாகங்கள் தன்வசம் கொண்டிட
முனிவில்லா நிலையோடு முதல்வனாய் சூடிட
நனிகல்வியை நாளும் கற்றல் நன்றே…
அச்சங்கள் நீங்கி அறிவோங்கி நிலைத்திட
இச்சைகள் ஏதுமின்றி இனியறம் புரிந்திட
எச்சங்களாய் இருக்கும் இடைநிற்றல் அறுந்திட
பிச்சைக் புக்காயினும் கற்றல் நின்றே.
- விருதை சசி, விருதுநகர்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.