மாறிப் போனது...?
அம்மியும் ஆட்டுக்கல்லும்
தந்த சோளத் தோசையும்
பாட்டியம்மாவின் நினைவாய்...
மாறி மாறி இடித்த
உலக்கைகளில்
இடிபட்டுக் கொண்டிருக்கும்
ஊர்க்குசும்புகள்...
அம்மாவின் கைவலியில்
ஆட்டுக்கல்லில் அரைபட்டு
அல்வாவாகும் கோதுமை...
அம்மியில் ஒன்றாகிய
தேங்காயும் மிளகாயும்
பொரிகடலையும்
நான் கற்ற முதல் சமையல்...
சுயம் மறந்த மனிதரிடையில்
காட்சிப் பொருளாகிய
பழமைகள்...
மாற்றி வைத்தவைகள்
அம்மியும் ஆட்டுக்கல்லும்
மட்டுமல்ல...
நாம் அலவளாவிய நேரங்களும்...
கல்லிலே கைவண்ணம்
காட்டிய அம்மாக்களோடு
போனது
அந்த அரைத்து வைத்த
மீன் குழம்பு வாசம்...
மின்சாரம் தொலைத்த நாட்களில்
அழையா விருந்தாளியாய்
இவர்கள்...
உரலும் கூட
மாறிப்போனது
நவின உலகில்...
மறைந்து போன
கற் பரம்பறையில்
கடைக்குட்டியாய்
இஞ்சி நசுக்கும்
குட்டி உரல்...!
- சசிகலா தனசேகரன், திருவண்ணாமலை
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.