தோடு
அந்தத் தோடுதான்
எவ்வளவு அழகானது...
பல கரங்கள் தீண்டி தீண்டி
சற்று மங்கிப் போயிருந்தாலும்
அதன் மூச்சுமுட்ட
நெழிகியும் பெட்டியும்
அடைத்து அடைத்து
தொங்கும் அதன்
ஓர விளிம்புகள்
அழுந்தியிருந்தாலும்
அதுதான் எவ்வளவு அழகானது...
அம்மாவை விட
அப்பாவிடமே
நீண்டிருந்த அதன் நேரங்கள்
அழகிற்கல்ல அடகிற்கு
ஓயாமல் தொலைந்தும்
அது அழகாயிருந்தது...
மீண்டும் அதே வியப்பு
நெடுநாள் கழித்து
அது மீண்டும்
அம்மாவின் காதுகளில் ...
அது இன்னும் அழகாகியிருந்தது
அக்சய பாத்திரத்தை விடவும்...
- முனைவர் கோ. சுனில்ஜோகி, கோயம்புத்தூர்.
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.