இரசம்பூசாத கண்ணாடியின் பின்னங்கழுத்து
இரசம்பூசாத இந்தக் கண்ணாடி
வெளிப்படையானதல்ல
வெளிப்படையாகிறது…
பட்டுப்போகப்போகும் மரங்களையெல்லாம்
பச்சையாகக் காட்டச்சொல்லும்
ஓர் அகோரம் பீடித்திருக்கிறது அதனை …
நரமாமிசத்தின் நிணத்தை தன் கூரெயிறால்
ஜவ்வாய் மேல்கீழ் இழுத்து
மூச்சுமுட்ட உண்ணும்
அந்த அகோரத்தின் வாய்நாற்றம்
கனத்துப் படிந்துள்ளது
அக்கண்ணாடியின் அகமெங்கும்...
அகலாத இந்த அகப்புறப் அழுக்கு
அபத்தமாய் படிப்பறைப் பேணலுக்குள்…
பரிணாமத்தின் விரல்கள்
அகக்கண்ணாடியின் நிணப் படிவில்
வரைந்த கோடுகளையெல்லாம்
அழித்தழித்துச் செல்லும்
அந்த அகோரத்தின் விரல்களை
யாருடையதோ?
பேன் பார்க்கும் குரங்கினுடையது
என்பதோர் பேரபத்தம்…
குரங்கிற்கு முந்தைய பரிணாமத்தை
புரியவிடாது பிரட்டும் அந்த அகோரத்தின் கோரபிடி
அந்தக் கண்ணாடிக்கு மட்டுமல்ல...
எதுவாகினுமே, இரசம்பூசாத கண்ணாடி
மிகவும் வெளிப்படையானதுதான்
மறுபுறத்தில் அப்பட்டமாய்
அந்தரங்கத்தைக் காட்டித் தொலைக்கிறதே…
அந்த அகோரத்திற்குத் தெரியமலிருக்குமோ?
இறுக்கும்பிடி முன்னங்கழுத்திற்கு மட்டுமென்று
- முனைவர் கோ. சுனில்ஜோகி, கோயம்புத்தூர்.
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.