கண்ணதாசன் ஒருவன் அன்றோ!
தேன்குழைத்த சொற்களினால் கவிதை சொன்னான்
தீண்டுமின்பத் தென்றலதன் சுகத்தைத் தந்தான்
வான்புகழ வருமழையாய்ப் பாட்டி சைத்தான்
வற்றாத வண்டமிழின் ஊற்றாய் நின்றான்
ஊன்கலந்த உயிர்கலந்த உவப்பைச் செய்தான்
உலகெல்லாம் காற்றலையில் நிறைந்தி ருப்பான்
ஆன்கறந்த பாலைப்போல் தூய்மை யானான்
அகம்புறமாய் ஒன்றான கண்ண தாசன்.
திரையிசையில் புதுமைசெய்த தேவன் நாளும்
தீந்தமிழின் நறவத்தை மாந்தி மண்ணில்
தரையமரும் ரசிகர்கள் தாளம் போடத்
தத்துவமும் மனமகிழ்வும் தனிமைச் சோகம்
வரைமுறையாய் மக்களுக்குத் தந்த வள்ளல்
வானுலாவும் திங்களென வலமாய் வந்தோன்
கரைநழுவா நதிவெள்ளம் போல என்றும்
கற்றோர்தம் மனம்நிறைந்தான் கண்ண தாசன்.
கவியரசர் என்றாலே கண்ண தாசன்
கைகட்டி நிற்குமவன் முன்னால் சொற்கள்
கவிதையிலே இடம்பிடிக்கத் தவங்கி டக்க
கனித்தமிழின் இலக்கியங்கள் வரிசை நிற்க
செவிநிறைக்கச் செந்தமிழைச் செய்த ளித்தோன்
சிந்துசந்தம் முந்திவரச் சிந்தை கொண்டோன்
புவிநிறையப் புகழ்கொண்டு நினைவில் தங்கப்
பொலிந்துநின்ற கண்ணதாசன் ஒருவ னன்றோ!
- இளவல் ஹரிஹரன், மதுரை.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.