தெருவெங்கும் தமிழ் வளர்ப்போம்!
தெருவெங்கும் தமிழ்வளர்க்கும் செயலைத் தூண்டும்
திருவோட்டை ஏந்துகின்ற நிலையா வேண்டும்!
கருவுக்குள் உருவான தமிழைக் கொள்வோம்
கல்லறைக்குள் போகுமட்டும் தமிழால் வெல்வோம்
நெருப்புக்குள் வெப்பத்தை உணர்கின் றோமே
நெஞ்சாரத் தமிழைத்தான் பயில்கின் றோமா
விருப்புக்குள் தமிழ்ப்பாடம் கொண்டால் தானே
வீதிகளில் தமிழ்மணக்கும் என்பேன் நானே.
பழம்பெருமை மூத்தமொழி என்பார் வீட்டில்
பண்டொருநாள் பேசுமொழி ஆக்கி ஏட்டில்
கிழமொழியாய்த் தேயவைப்பார் கேலி செய்வார்
கேட்டாலோ மாறாகப் பொய்கள் பெய்வார்
வழக்கொழிந்து மெல்லயினிச் சாகு மென்பார்.
வளர்பிறையாய்த் தமிழ்மொழியை மீட்போம் நன்றாய்
கிழக்குமுதல் முழங்கவைப்போம் எட்டுத் திக்கும்
கீழ்மையினை வேரறுக்கும் தமிழு திக்கும்.
தெருவெங்கும் தமிழ்வளர்ப்போம் தெய்வம் போற்றும்
திருக்கோவில் தலமெங்கும் தமிழை ஏற்றும்
அருஞ்செயலால் விளங்கவைப்போம் அணுவுக் கப்பால்
அகம்புறமாய் முழங்கவைப்போம் மொழிமீ தன்பால்
திருத்தமிழை அரசாளச் செய்வோம் நாவில்
திருவிளக்காய்ச் சுடர்விடவே வைப்போம் வாழ்வில்
பொருத்தமுறும் சடங்குகளில் பொருந்தச் செய்வோம்
பூவுலகின் நாடுதோறும் திருந்தச் செய்வோம்
- இளவல் ஹரிஹரன், மதுரை.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.