மனம் மட்டும் ஓய்தலில்லை
இரவும் நிசியும் ஓய்ந்து போகும்
எழுதும் எழுத்தும் சாய்ந்து போகும்
வரவும் செலவும் தேய்ந்து போகும்
வண்ண மசியும் காய்ந்து போகும்
அரவம் அடங்கி மாய்ந்து போகும்
அணைப்பின் சூடும் தீய்ந்து போகும்
மறந்தும் கணமும் மாய்தலின்றி
மனம் மட்டும் ஓய்தலில்லை.
*****
போதியின் அடியில் அடங்கும் மனமும்
புரியும் காதலில் அடங்குதலில்லை
பாதியில் விழித்துப் பார்க்கும் மனமும்
பரிவின் கருணையில் மடங்குதலில்லை
வேதியல் மாற்றம் வேதனை ஏற்றம்
விளங்கிடும் மனமும் முடங்குதலில்லை
மாதிரி யாகிப் போகும் முன்னே
மனம் மட்டும் ஓய்தலில்லை
*****
விழிப்பு நிலையோ உறக்க நிலையோ
விழிகள் மூடிய கிறக்க நிலையோ
வழிகள் தவறிய இருட்டு நிலையோ
வாழ்வில் நிலவும் குருட்டு நிலையோ
மொழிகள் உளறும் முரட்டு நிலையோ
முன்பின் அறியா திருட்டு நிலையோ
முழிக்கும் எந்த நிலையிலும் காதல்
மனம் மட்டும் ஓய்வதில் லேயே.
- இளவல் ஹரிஹரன், மதுரை.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.