போரை நிறுத்து
நிலையாமையுலகினில் நிரந்தரம் நானேயென்று
அலைபாயும் எண்ணத்தால் பகைமை காட்டி
கொலை வன்மங்களால் வளமழித்து நாளைய
தலைமுறைத் தடமறுக்கும் போரை நிறுத்து!
நீயா நானான்ற போலியான போர்வையினால்
தாயவள் சுமக்கின்ற சூலிற்கோர் சங்கடத்தை
பாய்கின்ற தோட்டாக்கள் பதம் பார்த்து
சேயதனை பிண்டமாக்கும் போரை நிறுத்து!
ஆப்தத்தை அழித்துவிட்டு மேதினி மீதொரு
சப்தத்தை சங்கமிக்கும் ஆதிக்க ஆகவத்தை
இப்போது மட்டுமின்றி அகிம்சை நெறிபற்றி
எப்போதும் தோன்றாது போரை நிறுத்து!
ஆதிக்க நாயகனாய் அண்டத்தை அடக்கியாள
மோதிக் கொள்ளும் முறை முறியடித்து
பாதிப்பு ஏதுமில்லா பாசத்தைக் கைப்பற்றி
சாதித்து வாகை சூடிட போரை நிறுத்து!
- விருதை சசி, விருதுநகர்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.