தவமிருக்கிறேன் நான்...!
வெளியில் பலத்த மழை
சுவாரசியமாய்
பேசிக் கொண்டிருக்கிறது
மண்ணோடு.
பிசுபிசுக்கும் ஈரக் காற்று
நேசத்துடன்
உறவாடிக் கொண்டிருக்கிறது
திரைச்சீலையோடு.
கூந்தலில்
மல்லிகை மணக்க
அயல் நாட்டிலிருக்கும்
கணவரோடு அலைபேசியில்
கொஞ்சிக் கொண்டிருக்கிறாள்
அக்கா.
குளிருக்கு இதமாய்
பொம்மைகளைத் தம் மார்போடு
சேர்த்தணைத்தபடி
கதை சொல்லிக் கொண்டிருக்கிறாள்
தங்கை.
கதகதப்பு வேண்டி
சாய்வு நாற்காலியில்
புகைத்த வண்ணமிருக்கிறார்
தாத்தா.
அடுக்களையில்
நொறுக்குத்தீனி தயாரிக்கும்
பதற்றத்திலிருக்கிறாள்
அம்மா.
பூஜையறையில்
நெய் தீபமேற்றி
காயத்திரி மந்திரம் ஜெபிக்கிறாள்
பாட்டி.
உள்தாழிட்ட அறைக்குள்
ஆழ்ந்த யோசனையில்
தனியே ஓய்வெடுக்கிறார்
அப்பா.
உங்களுக்காக
ஒரு கவிதை, புனைய வேண்டி
வார்த்தைகளுக்காய்
தவமிருக்கிறேன் நான்...!
- பாரியன்பன் நாகராஜன், குடியாத்தம்.
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.